பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

துருக்கியில் சில பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் விடுகதை போடுவதில் கெட்டிக்காரிகள். அவர்கள் வீட்டுக்குப் பெண் பார்க்க ஒரு பையன் வந்தால், அவன், அந்தப் பெண் போடும் விடுகதைகளுக்குச் சரியாக விடை கூறவேண்டும் அப்போதுதான், அவனை அவள் மணந்து கொள்வாள். இல்லாவிடில், ஏமாற்றத்துடன் திரும்பிப் போகவேண்டியது தான்! விடுகதைக்கு விடை சொல்லத் தெரியாதவர்கள் பிரம்மசாரியாகவே காலம் தள்ள வேண்டியதுதானாம்!

அங்கே மற்றொரு வகை மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பயிர்கள் வளரும் காலத்தில் வயல் கரைகளில் உட்கார்ந்துகொண்டு விடுகதைகள் போடுவார்கலாம். யார் யார் சரியான விடை சொல்லுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நல்ல விளைச்சல் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

***

ஆப்பிரிக்காவில் விடுகதைக்குப் பஞ்சமே இல்லை. அங்கு 'விடுகதை விளையாட்டு' என்று ஒரு வினையாட்டு உண்டு. அந்த விளையாட்டில் சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஒரு கட்சிக்கு ஐந்து ஆறு பேர் இருப்பார்கள். ஒரு கட்சியிலிருந்து ஒருவன் விடுகதை போடுவான். எதிர்க்கட்சிக்காரர்கள் அதை விடுவிக்க வேண்டும். அல்லது பதில்-விடுகதை போடவேண்டும். இப்படியே மணிக்கணக்கில் இந்த விளையாட்டை அவர்கள் நடத்துவார்கள்.