பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வேண்டும் விடுதலை

மறைமுகமாகத் திட்டங்கள் தீட்டிக் கொள்ள வேண்டுமென்றும்; தம்மிடம் உள்ள திட்டங்களைத் தெரிய விரும்புவார் முறையோடு அணுகினால் தெரிந்து கொள்ளலாம் என்றும்; இப்போதைக்கு அரசினர் அலுவலில் இருப்போரெல்லாம் சிறைப்பட்டுத் துன்பப்படுவதில் பயனில்லை என்றும்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடுவணரசுத் துறையில் ஊடுருவித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு, அதன் பின் வினையாற்ற வேண்டும் என்றும் தலைவர் என்று யாரும் இருக்கக் கூடாதென்றும் பேசினார்.

திரு. இராசாங்கம் பேசுகையில் தமிழகம் எவ்வாறேனும் விடுதலை பெற வேண்டுமென்றும்; தாம் அவ் வினைப்பாட்டிற்குத் துணை செய்ய உறுதியுடன் இருப்பதாகவும் சொன்னார்.

வழக்குரைஞர் திரு. அ. மு. சம்பந்தம் தாம் தி.மு.க.வைச் சேர்ந்தவரென்றும், மிகுந்த விடுதலை உணர்வுடன் இருப்பதாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

திரு. அறவாழி பேசுகையில், தமிழினத்தை வீழ்த்துவதில் குறியாயிருக்கும் துக்ளக் 'சோ'வுக்குச் செருப்புகளைப் பரிசாக அனுப்ப வேண்டும் என்றும் கச்சதீவுப் புலனத்தில் இந்திரா அம்மையார் நடந்து கொண்டதைக் கண்டித்தும், ஆனால் கச்சத்தீவை இலங்கையுடன் சேர்த்து விட்டால் இலங்கைத் தமிழர்களே முதலில் தனிநாடு வாங்கி நமக்கு வழிகாட்டுவார்களென்றும் கூறினார்.

திரு. இராவணன் பேசுகையில் இளமையிலிருந்தே தாம் பார்ப்பனரால் நசுக்கப் பெற்றது பற்றிக் குறிப்பிட்டு, அவர்களை வன்முறையில் தான் ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திரு. தமிழநம்பி உரையாற்றுகையில் திரு. பாவிசைக்கோ நடை முறைக்கு ஒவ்வாமல் நம்முடைய ஒற்றுமையைக் குலைக்கும் கருத்துக்களைக் கூறுவதாகவும் ஒழுங்கு படுத்தப் பெற்ற இயக்கம் வேண்டுமானால் ஒரு தலைவர் தேவை என்றும், நாம் அவருக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் அவரவர் விருப்பப்படி இயங்குவதால் எவ்வகைப் பயனும் விளையாதென்றும், பாவிசைக்கோ ஏதோ தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட திட்டத்தை வெளிப்படையாக நம்மிடமேனும் சொல்லட்டும். என்றும், ஒரு வேளை பிறர் செய்யும் எல்லா வினைப்பாடுகளையும் முறியடிப்பதே அவர் திட்டமாக இருக்கக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.