பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வேண்டும் விடுதலை

செய்துகாட்ட இயலும். ஆனால் இதை இப்பொழுது கூறி என்னபயன்?

இக்கால் நடைபெறவிருக்கும் மாநாடு, நம் எதிர்காலக் கொள்கையையும் நடவடிக்கையையும் ஓரளவு உறுதி செய்யப் பயன்படும் என்றே நாம் கருதுகிறோம் ஆனாலும் இம் மாநாடு நாம்மட்டும் தனித்துக் கூட்டுகின்ற ஒன்றன்று; கொள்கைத் தீவிரமும், மக்கள் நல நோக்கமும் உண்மையான உறுதியான செயற்பாடும் உள்ள நான்கைந்து இயக்கங்கள் கூடி அமைக்கும் மாநாடுகள் இவை. எனவே, வெளிப்படையான பயன் இப்பொழுதைக்குக் குறைவாக இருந்தாலும், எதிர்காலத் திட்ட அமைப்பிற்கு இம் மாநாட்டுச் செயற்பாடுகள் வலிவான அடிப்படைகளைக் கட்டாயம் தோற்றுவிக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

உண்மையான இனநலங் கருதுபவர்கள் தங்கள் பாங்கில் ஏதாவது இயன்ற அளவு செய்து கொண்டிருப்பார்களே தவிர, பிறரின் செயல்களை மூக்கறுப்பதும், முடக்கம் செய்வதும் ஆகிய தன்னம்பிக்கைக் குறைவான வேலைகளில் என்றும் ஈடுபடக் கூசுவார்கள். ஆனால், நம் தமிழினத்தைப் பொறுத்த மட்டில் வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பொதுநலத்தையும் ஒரு வாணிகமாகக் கருதி, இவ்வகையில் முயற்சி செய்யும் பிற அணியினரை ஒடுக்கவும் ஒழிக்கவும் பார்க்கின்றனரே தவிர, எங்கிருந்து வரினும் எவ்வகையில் வரினும் பொதுநல, இனநல முயற்சிகளை வரவேற்றுப் போற்றிக்கொள்ள மனமற்றவர்களாகவே உள்ளது வருந்தத்தக்கது. நம் தமிழினப் பொதுமை நல உணர்வு இன்னும் படிநிலை வளர்ச்சி எய்தவேண்டும் என்பதையே வன்மையாக இது காட்டுகிறது.

இனி, நாம் இன நலத்துக்கென்று முயற்சி செய்கையில், அந்நலத்துக்கான பல்வேறு கூறுகளில் ஒவ்வொன்றுக்குமாக ஒவ்வொரு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தேவையற்றதும், மக்களைத் திசை திருப்புவதுமான ஒரு முயற்சியே என்பது நம் தெளிவான கருத்து நம் தமிழினத்தைப் பொறுத்த அளவில் நமக்கு வந்துற்ற வீழ்ச்சிகளைப் பார்க்குமிடத்து, நம் இன, நாட்டு விடுதலைக்காக ஒட்டுமொத்தமான ஒரு முயற்சியையே படிப்படியாக வளர்த்தெடுக்க வேண்டுமேயல்லாமல், வேறு எந்த வகையான சிறு சிறு முயற்சியும் அறவே பயனில்லாமல் போய்விடும் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இந்தியெதிர்ப்புக்காக ஒரு போராட்டம், வகுப்புரிமைக்காக ஒரு முயற்சி, மாநில உரிமைகளுக்காக ஓர் அறைகூவல், என்பன போன்றவை யெல்லாம் சிறு சிறு முயற்சிகளே