பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

வேண்டும் விடுதலை

நலக் கொள்கையில் என்றுமே பொருட்படுத்தியதும், மதித்ததும் கூட இல்லை. 'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்னும் கொள்கையுணர்வில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது எம் வாழ்க்கை இம் மூச்சு அதன் பொருட்டு நிறுத்தப்படும் என்பதற்காக நாம் வருந்திக்கொண்டும் அஞ்சிக்கொண்டும் வாழவேண்டிய தேவை நமக்கில்லை. ஊரை அடித்து உலையில் கொட்ட வேண்டிய இன்றியமையாமையும் எமக்கில்லை. இன்றும் அரிசியும், பருப்பும், உப்பும், புளியும் அன்றாடப் பட்டியலிலேயே சேர்க்கப் பெற்றுள்ளன. எனவே, இன்றிறந்தாலும் ஒன்றுதான் என்று இறந்தாலும் ஒன்றுதான்! எனவே எவருக்காகவும் அஞ்சிக்கொண்டு, நமக்கென்று தேர்ந்து கொண்ட மொழி - இன - நாட்டு நலக் கருத்துகளைப்பற்றி உண்மைகளை யாருக்காகவும் ஒளிக்க வேண்டுவதில்லை.

இவற்றையெல்லாம் நம் நல்ல நெஞ்சுணர்வால் எண்ணிப் பாராமல் எம்மேல் இல்லாத பழிகளையும் இழிவுகளையும் சாற்றிக் கொண்டும், தூற்றிக்கொண்டும் கோழைகளையும் வயிறு கழுவ வாழ்க்கை நடத்தும் மோழைகளையும் தூண்டிவிட்டுக் கொண்டும், எம் தூய மொழி, இன, நாட்டு நலத் தொண்டுக்கு மாசு கற்பித்து, எம்மையோ எம் கருத்துகளையோ வீழ்த்திவிட முடியாது என்பதால், இக் கருத்துகளை இத்துணை அழுத்தந்திருத்தமாக வெளியிட வேண்டியிருக்கின்றதென்று அன்பர்கள் கருதிக்கொள்ள வேண்டுகின்றேன். மற்று, இனநல, நாட்டுநலக் கொள்கையில் நாம் தொய்வு கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? யாருக்காக நாம் அஞ்ச வேண்டும்? பின்னர் ஏன் நம் முயற்சிகளில் இத்துணைத் தொய்வு? அச்சம்? கோழைத்தனம்?

என்ன இந்தி எதிர்ப்பு வேண்டிக் கிடக்கிறது இன்னும்? மாநாடுகள் எதற்கு? தீர்மானங்கள் எதற்கு? சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கே, சொல்லிக் கொண்டிருந்தவற்றையே, சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருக்கிறோம்! இவற்றால் யாருக்கு என்ன புதுப்பயன் விளைந்து விடப் போகிறது? ஏன் நம்மிடத்தில் இந்த அடிமைத்தனமும் மடிமைத்தனமும்! நாங்கள் கூட்டினால், இந்தி எதிர்ப்பு மாநாடு சிறப்புறாது என்ன பயனும் விளைந்துவிடாது என்பது போலவேதான் நீங்கள் கூட்டினாலும்! ஏன், கலைஞர் கூட்டுவதுதானே! அவர் கூட்டினால் வடநாட்டு அரசு, ஓரளவுக்கு அஞ்சும்! ஆனால் அவர் அவர்களைப் பார்த்து அஞ்சுகிறார் அஞ்சுவதும், நாணுவதும், ஆமைபோல் வாழுவதும், கெஞ்சுவதுமாக எத்தனை நாளைக்குக் கிடப்பது?