பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

271

மட்டும் கண்டிப்பதும், அவற்றுக்கு மூல காரணமாக உள்ள அரசின் அரம்பத்தனமான, கொள்ளையடிப்புத் தன்மையிலமைந்த நடைமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் எந்த வகையில் ஞாயமானது என்று கேட்க விரும்புகிறோம்.

இனி, இவை எப்படியோ இருக்கட்டும். இளைஞர்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள் என்பதற்காக, இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – ஒடுக்க வேண்டும் என்னும் அரசின் தவறான கொள்கைக்காக, இந்தப் பழியை யார்மேல் போடலாம் என்றபடி நம் தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசுக் காவல்துறை மேல்மட்ட அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாகப் பலவிடங்களிலும் பல வகையிலும் ஆய்வு செய்து அலையோ, அலையென்று அலைந்து, அங்கும் இங்கும் சுற்றி, இறுதியில் நம் தென்மொழி அலுவலகத்திற்கும் அச்சகத்திற்கும் வந்து, ஒருவாறு நிறைவு கொண்டு, நம்மைப் பற்றியும், நம் தென்மொழி அன்பர்களைப் பற்றியும், உ.த.மு.க. தொண்டர்களைப் பற்றியும், தென்மொழி, தமிழ்நிலம் விற்பனை செய்யும் முகவர்களைப் பற்றியும், பலவாறு நம்மிடம் வினாக்கள் எழுப்பியும், அவர்களிடம் சென்று உசாவியும், பல்வேறு வகையான நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் செய்து வருகிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், ஒருவன், எத்துணைக் கொடியவனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் திருடனாகவும் இருந்தாலும், ஒரு மதத்தைச் சார்ந்த செயல்களைச் செய்வானானால், அவன் எத்துணை நல்லவனாகவும், அறக்காப்பாளனாகவும், நேர்மையாளனாகவும், மக்களால் மதிக்கப்பட்டு, குமுகாயத்தில், ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று விடுகிறானோ, அதேபோல, ஓர் அறக் கொடியவன், சுரண்டல்காரன், முடிச்சுமாறி, கொள்கைக்காரன் அல்லது கொலைகாரன் கொஞ்சம் பசையுள்ளவனாக விருந்து, ஆளுங்கட்சியைச் சார்ந்து இயங்கிவிட்டால், அவனுக்குக் காவல் துறையினராலோ, அல்லது அறத்துறையினராலோ எந்தவகைத் தொல்லையோ இடர்ப்பாடோ அல்லது தண்டனையோ ஏற்படுவதில்லை; மாறாக அவர்கள் சார்பிலிருந்து பாதுகாப்போ, பாராட்டோ, பட்டங்களோ, வெகுமதிகளோ கிடைத்து விடுகின்றன. இன்னும் பொதுமக்களிடமிருந்தும் அளவற்ற மதிப்பும் பெருமையும் வேறு ஏற்பட்டுவிடுகின்றன.