பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

307

கேரளாவிலும், கருநாடகத்திலும், அரியானாவிலும், மேற்கு வங்காளத்திலும், எதிர்க்கட்சியாக இருந்து வரும் இந்திராக் கட்சியினர் செய்து வரும் கலகங்கள், கலவரங்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பான, குடியரசு அமைப்புக்கே மாறான செயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்மையில் கூட இராசத்தான் சட்ட மன்றத்திலும் உறுப்பினர்கள் கூச்சசலும் குழப்பமும் ஏற்படுத்தியதாகப் பலமுறை பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே முறையிலேயே தமிழகத்திலும் அ.தி.மு.க வைத் தூண்டி விட்டுப் பேராயக் கட்சி செயல்படத் தொடங்கிவிட்டது; நாள் தோறும் அக்கட்சியின் தலைவர் இராசீவின் தூண்டுதலால் நடக்கும் அடாவடித்தனமான, அரம்பத்தனமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றக் குடியரசு அமைப்பையே அவமதிக்கும் போக்கை உறுதிப்படுத்துகிறது.

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நடுவண் அமைச்சர் தினேசு சிங்கை அனுப்பிச் செய்தியாளரிடம் 'இந்த (தி.மு.க) ஆட்சி - மக்களாட்சிக்கு மாறான ஆட்சியென்றும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான ஆட்சியென்றும், அதைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் சொல்ல வைத்துள்ளது தில்லியாட்சி. இதை வி.பி.சிங், முன்னாள் நடுவண் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் உச்சநெறி மன்ற நடுவர் வி. ஆர். கிருட்டிணையர் முதவியோர் கூடக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கண்டித்துள்ளனர்.

இனி, இவ்வளவுக்குப் பின்னும் கலைஞரின் ஆட்சி ஏதோ ஒரு காரணம் கூறி 1975 ஆண்டுப் போல், கலைக்கப்பட்டால், தமிழ் நாட்டில் நடப்பதோ வேறாக இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுதைக்குச் சொல்லி வைக்கிறோம். அந்த நிலையை இராசீவ், வருவித்துக் கொள்ளமாட்டார் என்றே நம்புகிறோம்.

- தென்மொழி, சுவடி :24, ஓலை 11.1989,