பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேண்டும் விடுதலை

தன்மையை உண்டாக்கிக் கொண்டு முன்னேற வாய்ப்பிருக்கும். ஒரு மாநிலத்தவர் அண்டை அயல் மாநிலத்திற்குச் செல்லுவதும் அங்குள்ள நடைமுறைகளில் ஈடுபடுவதும் இருமாநிலத்தவரின் விருப்பத்தையும் இசைவையும் பொறுத்தனவாக அமைய வேண்டும். இவையன்றி இன்னும் பல விரிந்த அமைப்புகளையும் ஒழுங்குபட இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்கு ஊறு விளையாவண்ணம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உலகம் இக்கால் மெச்சிப் பேசும் குடியரசு முறை எல்லா வகையிலும் இப்பொழுதுள்ளபடியே இருந்துவிட வேண்டும் என்பது உலக அறிஞர்களின் கருத்தன்று. முடியரசு முறையில் எப்படிப் பல தீமைகளும் இயலாமைகளும் இருந்தனவோ அவ்வாறே குடியரசிலும் தீமைகளும் இயலாமைகளும் இருக்கவே செய்கின்றன என்பதே அவர்தம் கருத்தாகும். எனவே இப்பொழுதுள்ள முறையை இப்படியே வைத்துக் கொள்ளுவது தான் சிறந்த தென்று கூற முடியாது. அதிலும் காலப் போக்கில் பல திருத்தங்களைச் செய்தே ஆக வேண்டும். அதன் முடிவு நாம் கூறிய மொழியுரிமைத் தன்னாட்சிக்குத்தான் வித்தாகும். என்பதை எவரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு நாம் வலிந்து கொண்டு செல்லப்படுமுன் நாமே அச்சூழலைத் திருத்தமான முறையில் வரவேற்றுக் கொள்ளுவது தாழ்வோ பிழையோ ஆகிவிடாது. எனவே தமிழக விடுதலை தேவையான இன்றியமையாத ஒன்று! பிற மாநிலங்களும் தன்னாட்சி பெற வேண்டும் என்பது நம் எண்ணம். இதுபற்றிப் பிறிதொருகால் இன்னும் விளங்கப் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி : 4 ஓலை 5, 1966