பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

வேண்டும் விடுதலை

கூட நடுவணரசை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற நிலை இன்னும் நமக்கு எதற்கு? நம் கலைகள், பண்பாடுகள் முதலிய அனைத்தின் மூலப் பெயர்களும் அழிக்கப்பட்டுப் பாரதக் கலைகள், பாரதப் பண்பாடுகள் என்று மாற்றாந்தாய்ப் பெயர் சூட்டி அழைக்கப்படும் இழிநிலை நமக்கு ஏன்? ஒவ்வொரு நிலையிலும் தமிழர் என்ற தனித்தன்மையை நாம் இழந்து ஆரியமயப்படுத்துகிறோம். அல்லது இந்திக்காரர்க்கு நாம் அடிமைகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம்? இவ் விழிநிலையை இன்னும் எத்தனைக் காலத்திற்கு நாம் பொறுத்துக் கொள்வது? எங்குப் பார்த்தாலும் இந்தி, சமசுகிருதம், ஆரியம், முதலாளியம் - என்று மாற்றார்களின் மொழிக்கும் இனத்திற்கும் ஆளுமைக்கும் என்றென்றுமே தலையசைத்துக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டிருக்க நாம் நிலையான அடிமைகளா? உரிமை வாழ்க்கையை முதன்முதல் அமைத்துக் கொண்டவரும், அவ்வுரிமையை உலக மக்களுக்கு முதன் முதல் கற்றுக் கொடுத்தவரும் தமிழரில்லையா? வரலாறு அவ்வாறிருக்க, இன்னு முழுப் பச்சைப் பார்ப்பனியத்திற்கும், வடநாட்டு முதலாளியத்திற்கும் ஏன் நாம் கால் கை பிடிக்கவும், கண்காணிகளாகவும் வேண்டும். தன் மானமற்ற குமரி அனந்தன்களும், திண்டிவனம், வாழப்பாடிகளும், ம.கோ. இரா. அடிமைகளும் அவ்வாறு இருக்க விரும்பினால் தன்மானம் மிக்க நாமும் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?

இவ்விழிவு நிலைகளை ஒழித்துக் கட்டுவதற்கு இங்குள்ள எந்த இயக்கமும் போராட முன்வரவில்லை; முன் வராது. எனவே, தன்மானமும், இனமானமும் மிக்கவர்கள்தாம் ஒன்று கூடி உயர்த்தெழுந்து உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அவர்களைப் பிரிவினைக்காரர்கள், தேசியப் பகைவர்கள், வன்முறையாளர்கள், தீய ஆற்றல்கள் என்றெல்லாம் வல்லதிகாரக் குற்றஞ்சாட்டிப் பற்பல துன்பங்களுக்கு ஆளாக்கலாம். இருப்பினும் இக் கொள்கைக்காக மக்கள் போராடியே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் தலைமை (அதை எவர் கைப்பற்றினாலும்) இங்குள்ள எல்லா வகையான எழுச்சி நிலைகளையும் அடக்கித் தன்னாளுமை பெறவே பாடுபடுகிறது! சில நேரங்களில் சில நிலைகளில் அது துணிவு பெற்று ஒருவாறு நடுவணரசைப் பேச்சளவிலாகிலும் எதிர்ப்பதுபோல்