பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேண்டும் விடுதலை

ஆரிய அடிமைகள் மட்டுமல்லர்; தமிழர்களின் பகைவர்கள். நாம் எதையோ எண்ணிக்கொண்டு எவருக்கோ போடும் பூமாலைகள் அப்படிப்பட்டவர்களின் கழுத்துகளில் போய் விழுகின்றன என்றால் நம் அரசியல் கொள்கையும் வீழ்ச்சியுறுங்காலம் நெருங்கிற்று என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அத்தகைய சூழ்ச்சிக் குப்பைகளை இப்படியே கிளறிக்கொண்டே போனால், அவற்றில் நாம் தொலைத்த கொள்கை மணிகள் இன்னும் எத்தனையோ மின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம். எனவே இந்த நிலையில் நாம் செய்யவேண்டுவது என்ன என்பதை மட்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

தமிழகம் தன்னாட்சி பெற்றாலன்றித் தமிழும் தமிழனும் நாளைக்கன்று, இன்னும் ஆயிரமாண்டுகள் போனாலும் இப்படியே தான் இருத்தல் முடியும். அவ்வப்பொழுது எவராகிலும் சில பக்தவத்சல சுப்பிரமணியங்கள் இருக்கத்தான் செய்வர். இவர்களின் காட்டிக் கொடுப்புகளின்றும், ஆரியவடவரின் சூழ்ச்சிகளினின்றும் என்று நாம் மீட்சியுற்று நம்மைக் காத்துக்கொள்கின்றோமோ, அன்றே நாமும் வாழ்கின்றோம் என்று பொருளாகும். உலகில் அன்று தொலைநோக்கிக்கும் அகப்பட்டிராத எத்தனையோ இனங்கள், நாடுகள் இன்று தொலைக்காட்சியில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று உலகளாவிப் பெருமையுற்ற தமிழினமும், தமிழகமும் தமிழும் இன்று தேய்ந்து மாய்ந்து வருகின்றன என்பதை உலகியலறிவுற்ற ஒவ்வொரு தமிழனும் உணர்வான். போலிகள் சிலர்தாம் பெருமைப்பட்டுக் கொள்வர். அவர் தம்மை மேலும் சீர்குலைக்க ஆரிய வடவரின் அதிகார வாய்கள் சிலதாம் அவர்களையும் அவர்களின் போக்கையும் சரி, உயர்ந்தது, சிறந்தது என்று புகழ் பாடிக் குழிபறித்துக் கொண்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு பாராட்டும் நம்மை ஒரு படி கீழிறக்குகின்றது. அவற்றில் மயங்கிக் கிறங்குகிறான் தமிழன். இவன் இந்தத் தலைமுறையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறுவானானால், இனி எந்தத் தலைமுறையிலும் தலையெடுக்க மாட்டான் என்பதை நெஞ்சில் பொறித்துக் கொள்ளுதல் வேண்டும். நம்மூச்சு தமிழக விடுதலை; நம் பேச்சு தமிழக விடுதலை நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் முழு வாழ்க்கையும் செலவிடப் பெற்றாகல் வேண்டும். தமிழனே! வீழ்ந்து கிடவாதே; விழி எழு! நட!

- தென்மொழி, சுவடி 7, ஓலை 8, 1969