பக்கம்:வைணமும் தமிழும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வைணவமும் தமிழும்


இவர்தம் அருளிச் செயல்கள் : (1) திருச்சந்த விருத்தம் (2)நான்முகன் திருவந்தாதி என்ற இரண்டும் இவர்தம் அருளிச் செயல்களாகும். இவற்றுள் முன்னது கம்பீரமான சந்த விருத்தத்தாலான 120 பாசுரங்களைக் கொண்டது. ஓதுவார் உள்ளத்தில் உணர்ச்சியைக் கிளரச் செய்யும் பான்மையது. இது முதலாயிரத்தில் பெருமாள் திருமொழியை அடுத்து இடம் பெற்றுள்ளது. பின்னது 96 வெண்பாக்களைக் கொண்டது. இஃது இயற்பாத் தொகுதியில் முதலாழ்வார் பிரபந்தங்களை அடுத்து இடம் பெற்றுள்ளது.

வாழ்ந்தகாலம்: இவர் வாழ்ந்த காலத்தைச் சரியாக அறுதியிடுவதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. எட்டாம் நூற்றாண்டுக்குமுன் முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்று அறுதியிடுவர் ஆய்வாளர்கள்.

(5). தொண்டரடிப் பொடியாழ்வார்: சோழ நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. புள்ளம் பூதங்குடி[1] இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.(பெரி. திரு. 51) இதன் அருகில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் 'திருமண்டங்குடி' என்ற ஒருசிற்றூரில் திருமாலின் 'வைஜயந்தி' என்னும் வனமாலையின் கூறாக ஆடித் திங்கள் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு முன்குடுமிப் பார்ப்பனருடைய திருமகனாகப் பிறந்தார் இந்த ஆழ்வார். இவரது பிள்ளைத் திருநாமம் 'விப்ர நாராயணன்' என்பது. இளமையிலேயே நான்கு திருமறைகளையும் ஆறு சாத்திரங்களையும் கசடறக் கற்றுத் துறை போய வித்தகர். ஞானவைராக்கியங்கள் நிறையப் பெற்று வளர்ந்து வந்தார். இவருக்கும் வைகுண்டத்தினின்றும்


  1. இது சோழ நாட்டிலுள்ள 40 திவ்விய தேசங்களில் ஒன்று