பக்கம்:வைணமும் தமிழும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வைணவமும் தமிழும்



நான்காம் திருநாள் : இன்று அரையர் காலையில் பாசுரம் சேவித்தல், அபிநயம் பிடித்தல், வியாக்கியானம் சேவித்தலோடு பிற்பகலில் 'கம்சவதம்’ நாடகத்தையும் நடித்துக் காட்டுவார். நாச்சியார் திருமொழி 'கண்ணன் என்னும் கருந்தெய்வம்' (131) என்ற பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து, வியாக்கியானம் செய்வார். அடுத்த பாசுரத்தைச் (13:2)சேவித்து விட்டு அதற்கு அடுத்த 'கஞ்சனைக் காய்ந்த கருவில்லி' (13:3) என்று மட்டும் சொல்லி நிறுத்துவார். அழகிய மணவாளப் பெருமாள் கம்சனைக் கொன்றதைப் பிற்பகலில் காட்ட எண்ணி, அப்பதிகத்தில் எஞ்சிய பாடல்களைச் சேவிக்காமல் அடுத்த பதிகமான 'பட்டிமேய்ந்த காரேறு’ (14) சேவித்துவிட்டுப் 'பெருமாள் திருமொழியில்' நுழைவார்.

முதற் பாசுரமாகிய 'இருள் இரிய' (1:1) என்பதற்கு அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்து எஞ்சிய பெருமாள் திருமொழி முழுவதும், திருச்சந்தவிருத்தம் முழுவதும் சேவிக்கப்பெறும். இன்றைய பாசுரத்தொகை 243. சில திருப்பதிகளில் ‘இருள் இரிய' (1:1) என்பதற்குப் பதிலாக “ஊனேறு செல்வத்து' (1:4) என்ற பாசுரத்திற்கு வியாக்கியானம் உண்டு. பிற்பகலில் முன் நிறுத்திய ‘கஞ்சனைக் காய்ந்த கருவில்லி' (13:3) என்ற நாச்சியார் திருமொழிப் பாசுரத்தை எடுத்துக்கொண்டு அரையர் தம்பிரான்படி வியாக்கியானம் சேவித்து கிருட்டிணாவதாரம் தொடங்கி 'கம்சவதம்' வரை நாடகமாக நடித்துக் காட்டுவார். இப்பதிகத்தில் எஞ்சிய பாசுரங்களையும் சேவித்துத் தலைக் கட்டுவர்.

ஐந்தாம் திருநாள் : இன்று அரையர் ‘திருமாலை’ தொடங்கி 'காவலில் புலனை வைத்து' என்ற முதற்பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து வியாக்கியானமும் செய்வார். மேலும்