பக்கம்:வைணமும் தமிழும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வைணவமும் தமிழும்



ஏழாம் திருநாள் :' இன்று பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஆறாம் திருமொழியில் (3.6) திருவாலிபற்றியது - விழா தொடங்கும். ‘தூவிரிய மலர் உழக்கி' (3.6;1) என்ற பாசுரம் தலைவி வண்டை விளித்துத் தலைவனுக்குத் தன் நிலைமையை உணர உரைக்குமாறு வேண்டுவது. வண்டிற்குக் கொடுத்துள்ள அடைமொழிகளின் பொருள் உணர்ந்து, அபிநயத்தில் கண்டு, இசையில் கேட்டு, மனத்தில் அசைபோட்டுச் சிந்திக்க உரியன. இப்பாசுர அபிநயவியாக்கியானங்கள் நிறைவு பெற்றதும். மேலும் மூன்று பாசுரங்களைச் சேவிப்பார். ஐந்தாம் பாசுரத்தில்,

வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்அரும்ப
நாள்நாளும் நின்நினைந்து
நைவேற்கு ஒ! மண்அளந்த;
தாளாளா!

என்பதோடு நிறுத்திக் கொள்வார். 'மண் அளந்த தாளாளன்' என்பதிலுள்ள கதை பிற்பகலில் நாடகமாக நடித்துக் காட்டப்பெறும். அடுத்த திருமொழி 'கள்வன் கொல்', (37) தொடங்கி 'கைம்மான மழகளிற்றை' (5.6) என்ற திருமொழி முடிய 240 பாசுரங்கள் இன்று சேவையாகும். இவை திருவாலி, திருநாங்கூர்த் திருப்பதிகளாகிய மணிமாடக் கோயில், வைகுந்த விண்ணகரம், அரிமேய விண்ணகரம், திருத்தேவனார்த் தொகை, வண்புருடோத்தமம், செம்பொன் செய்கோயில், திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், காவளம்பாடி, திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய பதினொரு திருப்பதிகள் திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம் பூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம் ஆகிய சோழ நாட்டுத் திருப்பதிகள் பற்றியவை: