பக்கம்:வைணமும் தமிழும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வைணவமும் தமிழும்


எழுதியவற்றைத் தம் ஆசிரியரின் திருமுன் வைத்தனர் வடக்குத் திருவீதிப்பிள்ளை. ஆசாரியப் பெருமகனாரும் அந்த ஏட்டினை முற்றிலும் நோக்கியதால் அது மிகச் சுருக்கமும் மிக விரிவுமின்றி சுருதப்பிரகாசிகையளவில் முப்பத்தாறாயிரம் கிரந்தங்களோடு கூடியதாய் இருக்கக் கண்டு மிகவும் திருவுள்ளம் உவந்தார். ஆயினும் தம் இசைவு பெறாமல் எழுதியதனால் அதனை வாங்கிக் கட்டி தம் இல்லத்தில் வைத்துக் கொண்டார்.

இச்செய்தியினைக் கேள்வியுற்ற நம்பிள்ளையின் மாணாக்கருள் மற்றொருவரான 'ஈயுண்ணி மாதவப்பெருமாள்' என்பார் அதனை அடைய வேண்டுமென்ற பெருவிருப்பங்கொண்டார். தம் கோரிக்கையை திருவரங்கநாதனிடம் விண்ணப்பித்தார். ஒருநாள் அரங்கநகர் அப்பன் தன் திருவடி தொழ வந்த நம்பிள்ளையை அர்ச்சகர் மூலமாக நோக்கியருளி ஈடுமுப்பத்தாறாயிரப் படியை மாதவப் பெருமாளுக்கு பிரசாதிக்குமாறு கட்டளையிட்டார். அக்கட்டளையினைத் தலைமேற்கொண்டு தம் மாணாக்கரான மாதவப்பெருமாள் என்னும் சிறியாழ்வான் அப்பிள்ளைக்கு ஈட்டைக் கொடுத்து அவரை வாழ்வித்தார்; அத்னால் அவர் மூலமாக உலகோரையும் வாழ்வித்தருளினார்.

சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளைஎழு
தேரார் தமிழ்வேதத் தீடுதனைத் - தாருமென
வாங்கிமுன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாங்கொடுத்தார் பின்னதனைத் தான்.[1]


என்று இதனைப் பதிவு செய்தார் மணவாளமாமுனிகள்.


  1. உ. ர.பா. 48