பக்கம்:வைணமும் தமிழும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வைணவமும் தமிழும்


நடுக்கமற எடுத்த ஆதிவராகன்,மேகம், காயாம் பூ, கடல், இருள், நீல மணி என்னும் ஐந்தையும் ஒக்கும் திருமேனியையுடையவன். காலக் கூறுபாடுகளைக் கடந்து நிற்பவன். அவனுடைய திருவடி, திருக்கை, திருக்கண், திருப்பவழம் இவை தாமரை மலரையொக்கும், நெருப்பையொத்த வெட்சிமலரை இடையிட்டுக் கட்டின திருத்துழாய் மாலையையுடையவன், அவரவர் செய்த தவப்பயனால் தியானிக்கத்தக்கவன். (13)

மலைகளில் சிறந்த திருமாலிருங் குன்றத்தில் மாயோனாகவும் பலதேவனாகவும் சேவை சாதிப்பவன். அவன் அருளின்றி வீடுபேறு அடைதல், துறக்கம் பெறுதல் அரிது. திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் திருமால் துளவமாலையை அணிந்தவன். நீலமணிபோன்ற மேனியையுடையவன் ஒளி மிக்கவன், ஒற்றைக் குழையையுடையவன்; கருடக் கொடியையுடையவன். கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன், திருவாழி, திருச்சங்கு முதலிய ஐந்து படைகளையுடையவன். (15)

(ஆ) பரிபாடல் திரட்டு : இருந்தையூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவன். இதில் அமுதம் கடைந்த செய்தி கூறப்பெற்றுள்ளது. (இருந்தையூர் என்பது மதுரையில் உள்ள திருக்கூடல் என்னும் திருப்பதி)

(இ) கலித்தொகை : இதில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒருகுழை யொருவன்போல் இணர் சேர்ந்த மராமரமும் (கலி-27) என்ற அடியில் நம்பி மூத்தபிரான் குறிப்பிடப்பெற்றுள்ளான். 'கொடுமிடல் நாஞ்சிலான்' (கலி 36) என்று கூறப்பெறுபவன். 'மல்லரை மறஞ்சாய்த்தமால்' (கலி-52) என்று மாயோன் குறிப்பிடப்பெறுகின்றான். ஒரு பாடலில் (கலி-103) 'மாயோன்' என்ற சொல் வருகின்றது. முல்லைக் கலியொன்றில் (104),