பக்கம்:வைணமும் தமிழும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

11



நீலமேனியையும் அலையடங்கிய கடலையும் நீர் நிறைந்த மேகத்தையும் ஒத்த திருமேனியையுடையவன். பிரகலாதன் பொருட்டுத் தூணிலிருந்து நரசிம்மனாகத் தோன்றி இரணியனின் மார்பைக் கிழித்த நகத்தையுடையவன். பண்டைக் காலத்தில் பூமி வெள்ளத்தில் அழுந்திய போது வராக வடிவம் கொண்டு அந் நிலத்தைத் தன் கோட்டால் எடுத்து நிறுத்திய செயல் உலகம் தாங்கும் மேருமலையின் செயலோடு ஒக்கும். பனை, கலப்பை, யானை முதலிய கொடிகள் இருப்பினும் கருடக் கொடியே சிறந்தாகத் திகழும். அன்பர் நெஞ்சிற் கருதிய வடிவமே அவனது வடிவம்; தனி வடிவம் இல்லாதவன் வனமாலை அணிந்தவன். தன்னினும் சிறந்த திருவடிகளையுடையவன்; நிறைந்த கடவுள் தன்மையையுடையவன். வேறு பண்புகளும் நிறைந்தவன். ஆலின் கீழும் கடம்பினும் ஆற்றிடைக் குறையினும், மலையிடத்தும் பிறவிடத்தும் பொருந்திய தெய்வங்களாக வேறுவேறு பெயரும் உருவமும் கொண்டு விளங்குபவன், "ஆர்வலர் தொழுகைகளில் அமைதியாக அமர்ந்திருப்பவன். அவரவர் ஏவலனாகவும் அவரவர் செய்த பொருளுக்குக் காவலனாகவும் இருப்பவன்"(4)

பீதாம்பரத்தையும் திருமுடியையும் மாலையையும் கருடக்கொடியையும்கொண்டவன். காத்தல் தொழிலையும் உடையவன். திருஆழியையும், திருச்சங்கையும் ஏந்திய கைகளையுடையவன். தன்னைத் தொழுவோர்க்கு வைகுண்ட பதவியை வழங்குபவன். ஐந்து பூதங்களும் மூவேழு உலகத்து உயிர்களும் அவனிடத்து உண்டாயின. பாற்கடல் நடுவே ஆயிரம் தலையையுடைய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்பவன். கலப்பையைப் படையாக உடையவன். பூமியை