பக்கம்:வைணமும் தமிழும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

வைணவமும் தமிழும்


அண்ணனின் ஆணைக்குப் பணிந்து அதனைச் செய்ய முற்படும் போது “விதியோ கணவரே!!” என்று கூவுகின்றாள் திரெளபதி,“பாண்டவரை மின்செய்கதிர்விழியால் நோக்கினாள்.” “வான் சபையிலுள்ள, கேள்வி பல உடையோர் கேடிலா நல்லிசையோர், வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள் மேலோர்" இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திக்கற்றவருக்குத் தெய்வந்தானே துணை? அந்தப் பேயன் துகிலுரிகையில் திரெளபதி உட்சோதியிற் கலந்தாள். உலகினை மறந்தாள். கண்ணனிடம் பிரபத்தி செய்து விடுகின்றாள். ஒருமையுறுகின்றாள். கண்ணபிரான் அருளால் துச்சாதனன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்கின்றன. இதனால் பிரபத்தி செய்வார் தூயராய் நின்று பிரபத்தி செய்ய வேண்டும் என்ற நியதி இல்லாமை தெளிவாகின்றது (ஸ்ரீவசபூஷ,29,30).

பார்த்தனுக்குப் பிரபத்தி நெறி போர்க்களத்தில் உபதேசிக்கப்பெற்றது. இதனால் புண்ணிய பூமியில்செய்ய வேண்டும் என்ற நியதி இல்லாது போயிற்று வேனிற் காலத்தில் செய்ய வேண்டும் என்ற காலநியதியும் இல்லாது போயிற்று, நீராடிய பின்தான் செய்யவேண்டும் என்ற பிரகார நியமும் இல்லாது போயிற்று. நீசர் நடுவே இவ்வர்த்தம் கேட்டதால் தூய்மையின்மையும் விலக்கில்லை என்பது தெளிவாயிற்று. மேலும், இதனால் பிரபத்தியைச் செய்யத் தொடங்குகால் தூய்மையில்லாதிருப்பவனுக்கு தூய்மை சம்பாதிக்க வேண்டா; தூய்மையாயிருப்பவனுக்கு தூய்மை இல்லாமையைச் சம்பாதிக்க வேண்டா என்று கூறுவர் பிள்ளை உலகஆசிரியர் (ஸ்ரீவச.பூஷ 31),