பக்கம்:வைணமும் தமிழும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

277


தருமன் முதலிய குந்தியின் மக்கள் மூவரும் மாத்ரியின் மக்கள் நகுல சகாதேவர்களும் திரெளபதியோடு சேர்ந்து கண்ணனைச் சரண்புக்கனர். இவர்கள் சத்திரியர்கள். திரெளபதி பெண், இவளும் கண்ணனைச் சரண் அடைந்தாள். காகம் (காகாசுரன்) ஒரு பறவை. அதுவும் இராமாபிரானைச் சரண் அடைந்தது. காளியன் ஒரு கொடிய நாகம், அதுவும் கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தது. கசேந்திரன் என்ற யானை ஒரு விலங்கு அவனும் நாராயணனைச் சரண் அடைந்தான். வீடணன் அரக்கர் குலத்தவன்; அவனும் காகுத்தனைச் சரண் புக்கான். பெருமாள் (இராமர்) சத்திரியப் பிறப்புடையவர்) அவரும் வருனனைச் சரண் புக்கர் இளையபெருமாள் சத்திரியர்; அவரும் பெருமாளுக்கு அடிமை செய்தார். இங்ஙனமே முசுகுந்தன் (மானிடன்), கத்திரபந்து(சண்டாளன்), காளியன் மனைவிமார்கள், இந்திரன் முதலிய தேவர்கள் இராக்கதர்களால் அடிபட்டவாணர வீரர்கள் ஆகியோர் சரண் புரிந்த செயல்களையும் அறியலாம். இதனால் பிரபத்திக்கு "ருசி” யுடையார் அனைவரும் அதிகாரிகளாகின்றனர் என்பதை உளங்கொள்ளல் வேண்டும்.

இதற்குத்தான் பிரபத்தி செய்யவேண்டும் என்ற பல நியமும் இல்லை. தருமபுத்திரர் முதலாயினோருக்கு அரசு அடைதல் பலம் திரெளபதிக்குப் பலம் ஆடை; காகத்திற்கும் காளியனுக்கும் பலம் உயிர்; கசேந்திரனுக்குப்பலம் கைங்கரியம்: வீடணனுக்குப் பலம் இராமனை அடைதல்; பெருமாளுக்குப் பலம் கடலைத் தாண்டுதல், இளையபெருமாளுக்குப் பலம் பெருமாளைப் பின் தொடர்ந்து அடிமை செய்தல் (ஸ்ரீவசபூஷ35, 36). எனவே, பிரபத்திக்குப் பல நியமும் இல்லை என்பது தெளிவாகின்றது.