பக்கம்:வைணமும் தமிழும்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

வைணவமும் தமிழும்


குறிப்பு : பிருந்தாவனம், கோவர்த்தனம் என்ற திவ்விய தேசங்களுக்கு ஆழ்வார் பாசுரங்கள் உள்ளன. இவற்றைச் சேர்த்தால் வடநாட்டுத் திருப்பதிகள் பதினான்காகி மொத்தத் திருப்பதிகள் 110 என்றாகும். ஆனால் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இவற்றைத் தவிர்த்து விட்டார். 108 என்ற எண்ணை நிலைநிறுத்துவதற்காக இவை இரண்டும் வடமதுரைக்கு அருகிலிருப்பதால் அவற்றுடன் அடங்கும் என்று விட்டார் போலும்.

ஆயர்பாடி வடமதுரைக்கு அருகில் இருந்தாலும் அது கண்ணன் வளர்ந்த இடமாதலால் அதனைச் சேர்த்துக் கொண்டார் என்று கருதலாம். கண்ணன் கோபியருடன் லீலைகள் புரிந்த இடம் பிருந்தாவனம். அண்மையில் இருந்தும் அதனையும், ஆயர்களையும் ஆநிரைகளையும் கல்மாரியினின்று காக்கக் கோவர்த்தனத்தைத் தூக்கிக் குடையாகப் பிடித்து தீரச்செயல் நடைபெற்ற இடம் அண்மையில் இருந்தும் அதனையும் ஏன் தவிர்த்தார் என்பதற்குக் காரணம் அந்த கண்ணனுக்குத்தான் வெளிச்சம்.