பக்கம்:வைணமும் தமிழும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

77



லுற்றான்; அவனிடம் பொறுக்கும் குணம் (க்ஷைமை குணம்) நிரம்பயிருக்கும்போது ஆழ்வாரின் பிழைகளைப் பொருட்படுத்தக் காரணம் இல்லை. தன்னுடைய பிழைகள் அவனுடைய பொறுக்கும் பண்பையும் மறைபித்தன போலும் என்று கருதிய ஆழ்வார்நாயகி அப் பெருங்குணத்தைச் சிறிது நினைப்பூட்டிவிட்டால் போதும் என்று கருதி பறவைகளைத் தூது விடுகின்றாள். சீதாப் பிராட்டியை ஆயிரக்கணக்கான வானரங்கள் தேடுவதைப்போலவே தன் கண்களில் கண்டவற்றையெல்லாம் தூதுபோகுமாறு ஏவுகின்றாள் ஆழ்வார் நாயகி. பறவைகளைத் துரது விடும் ஐதிகத்தைக் குறிப்பிடும் பராசரபட்டர் "சக்கரவர்த்தித் திருமகனார் திருவவதரித்த பின்பு வானரஜாதி வீறு பெற்றது போல, ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறு பெற்றது” என்று சுவையுடன் அருளிச் செய்வர்.

இவ்விடத்தில் ஒர் இதிகாசம்[1] நஞ்சியர் காலத்தில் சாமானியமாயிருப்பான் ஒருவன், விரக்தர்களும் வைதிகர்களுமான மகான்கள் பலரும் திருவாய் மொழிக் காலட்சேபத்தில் இது தத்துவ பரமாயிருக்குமென்று கருதி இத்திவ்வியப் பிரபந்தத்தைச் சேவித்து வந்து இத்திருவாய் மொழியில் வந்தவாறே 'இது காமுக வாக்கியமாயிருக்கிறது' என்று வெறுப்புக்காட்டிச் சென்றானாம். வேதாந்தங்களில் விதிக்கப் படுகின்ற பகவத் காமமே இப்படிப்பட்ட பாசுரங்களாகப் பரிணமித்ததென்று அவன் அறிந்திலன் கருவிலே திருவில்லாமையாலே - என்று நம்பிள்ளை வருந்திப் பேசுவர்.

பிரிவாற்றாமையுடன் இருக்கும் பராங்குச நாயகி நெய்தல் நிலத்தில் இருக்கின்றாள். பிரிந்தார் இரங்குவது நெய்தல்


  1. இதிகாசம்-என்பது ஒரு வரலாறு அல்லது ஒரு கதை போல் வருவது.