உள்ளடக்கத்துக்குச் செல்

சோலைமலை இளவரசி/நள்ளிரவு ரயில்வண்டி

விக்கிமூலம் இலிருந்து

கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன. கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப்பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது. பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுகளைப் போல் ரயில்பாதையின் தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு உற்றுப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ரயில்பாதையின் ஒருபக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒருமனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக் குவிந்திருந்த கருங்கல் சல்லிகளில் அவனுடைய கால்கள் சிலசமயம் தடுக்கின. ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின. அவற்றையெல்லாம் அந்த மனிதன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய நடை சிறிதேனும் தளரவில்லை. தடுக்கல்களையும் தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்தான்.

ரயில்பாதை ஓரிடத்தில் மொட்டைப் பாறையை வளைத்துக் கொண்டு சென்றது. வளைவு திரும்பியவுடனே இரத்தச் சிவப்பு நிறமான பெரிய நட்சத்திரம் ஒன்று தோன்றி அந்த நள்ளிரவுப் பிரயாணியின் கண்ணைப் பறித்தது. அங்கே சிறிது நின்று நிதானித்து பார்த்து 'அது நட்சத்திரமில்லை' கைகாட்டி மரத்தின் உச்சியில் வைத்துள்ள சிவப்பு விளக்கு என்றும் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தான் வந்திருக்க வேண்டுமென்றும் தெரிந்து கொண்டான். மேலும் ரயில்பாதையைத் தொடர்ந்து போவதா அல்லது ரயில்பாதையை அங்கே விட்டுவிட்டு வேறு வழியில் திரும்புவதா என்று அம்மனிதன் எண்ணமிட்டான். அந்த வேளையில் வேறு வழி கண்டுபிடித்துச் செல்லுவது என்பது சுலபமான காரியமில்லைதான். ரயில்பாதையின் ஒரு பக்கத்தில் கரிய பாறை செங்குத்தான சுவரைப் போல் நின்றது. மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தான். கல்லும் முள்ளும் கள்ளியும் கருவேல மரமும் நிறைந்த காட்டுப் பிரதேசமுமாகக் காணப்பட்டது. ஆயினும் அந்தக் காட்டுப் பிரதேசத்தின் வழியாகச் சென்றுதான் வேறு நல்ல பாதை கண்டுபிடித்தான வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவது ஆபத்தாக முடியலாம்.

இவ்விதம் அந்தப் பிரயாணி யோசித்துக் கொண்டிருந்த போது அவனுக்கெதிரே தெரிந்த கை காட்டியின் விளக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. சிவப்பு வெளிச்சம் பளிச்சென்று பச்சை வெளிச்சமாக மாறியது. அந்த மாறுதல் ஏன் ஏற்பட்ட தென்பதை அம் மனிதன் உடனே ஊகித்து உணர்ந்தான். தான் வந்த வழியே திரும்பிச் சில அடி தூரம் நடந்தான். வளைவு நன்றாய்த் திரும்பியதும் நின்று தான் வந்த திசையை நோக்கிக் கவனமாக உற்றுப் பார்த்தான். வெகு தூரத்தில் மின் மினிப் பூச்சியைப் போன்ற ஓர் ஒளித் திவலை பெரிதாகிக் கொண்டு வந்தது. 'கிஜுகிஜு கிஜுகிஜு' என்ற சத்தமும் அந்தத் திசையிலிருந்து கேட்கத் தொடங்கியது. ரயில் ஒன்று நெருங்கி வருகிறது என்று தெரிந்து கொண்டான். நம் கதாநாயகனுடைய உள்ளம் ஒரு கணம் துடித்தது. அவனுடைய கைகளும் துடித்தன. மறுகணம் அவன் மிக விந்தையான காரியம் ஒன்று செய்தான். தன்னுடைய அரைச் சட்டையின் பையிலிருந்து ஏதோ ஓர் ஆயுதத்தையும் ஒரு சிறு 'டார்ச் லைட்'டையும் எடுத்தான். டார்ச் லைட்டின் விசையை அமுக்கித் தண்டவாளத்தின் மீது விழும்படிச் செய்தான். ஒரு விநாடி நேரந்தான் விளக்கு எரிந்தது. அந்த ஒரு விநாடியில் அவன் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டான். ஒரே பாய்ச்சலில் தாவிச் சென்று தண்டவாளத்தில் ஓரிடத்தில் போய் உட்கார்ந்தான். ஆயுதத்தைக் கொண்டு ஏதோ செய்தான். திருகைச் சுழற்றுவது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் எழுந்துநின்று தன்னுடைய பலம் முழுவதையும் உபயோகித்துத் தண்டவாளத்தைப் பெயர்த்து நகர்த்தினான்.

அவ்வளவுதான்; அடுத்த நிமிஷம் ஆயுதத்தை வீசி எறிந்துவிட்டுக் கற்றாழை வேலியை ஒரே தாண்டலாகத் தாண்டிக் குதித்து வேலிக்கு அப்பாலிருந்த காட்டு நிலத்தில் அதிவேகமாக ஓட ஆர்மபித்தான். இரண்டு மூன்று தடவை தடுமாறிக் கீழே விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். சுமார் அரை பர்லாங்கு தூரம் ஓடிய பிறகு சற்றே நின்று திரும்பிப் பார்த்தான். ரயில் வண்டி பாறையின் வளைவை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. என்ஜின் முகப்பில் பொருத்தியிருந்த 'ஸர்ச் லைட்'டின் வெளிச்சமானது பாறையையும் ரயில்பாதையையும் அந்தப் பிரதேசம் முழுவதையுமே பிரகாசப் படுத்தியது. தண்டவாளத்தைப் பெயர்த்துவிட்டு ஓடிப்போய் நின்ற மனிதன் சட்டென்று பக்கத்திலிருந்த புதர் ஒன்றின் மறைவில் ஒளிந்து கொண்டான். ரயில் வண்டி பாதையின் வளைவை நெருங்கி வருவதை ஆவலுடன் கண் கொட்டாமல் பார்க்கலானான். அவனுடைய நெஞ்சு 'தடக் தடக்'கென்று அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் 'குபீ'ரென்று வியர்த்தது.

பாறையின் முடுக்கை நெருங்கியபோது ரயிலின் வேகம் திடீரென்று குறைந்தது. சட்டென்று 'பிரேக்' போட்டு ரயிலை நிறுத்தும்போது உண்டாகும் 'கடபுட' சத்தங்களும் ரயிலில் சக்கரங்கள் வீலிடும் சத்தங்களும் கலந்து கேட்டன. ரயில் நின்றது. நின்ற ரயிலிலிருந்து 'சடசட'வென்று சில மனிதர்கள் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் கையில் லாந்தர் விளக்குடன் இறங்கி வந்தான். எல்லாரும் கும்பலாக ரயில் என்ஜினுக்கு முன்னால் வந்து தண்டவாளத்தை உற்று நோக்கினார்கள். ஏக காலத்தில் காரசாரமான வசை மொழிகள் அவர்களுடைய வாயிலிருந்து வெளியாயின. இரண்டொருவர் குனிந்து பெயர்த்து நகர்த்தப்பட்டிருந்த தண்டவாளத்தைச் சரிப்படுத்தினார்கள். தலையில் தொப்பியணிந்திருந்த ஒருவர் தம் சட்டைப் பையிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துக் காட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சுட்டார். ரயில்பாதையின் ஓரத்துப் புதர்களிலிருந்து இரண்டு நரிகள் விழுந்தடித்து ஓடின. அதைப் பார்த்துக் கும்பலிலிருந்தவர்களில் இரண்டொருவர் 'கலகல'வென்று சிரித்த சத்தம் காற்றிலே மிதந்து வந்தது. புதரில் மறைந்திருந்த மனிதனுடைய உடம்பு நடுங்கிற்று. குளிர்ந்த காற்றினாலா துப்பாக்கி வேட்டினாலா சிரிப்புச் சத்தத்தினாலா என்று சொல்ல முடியாது.

மேலும் சில நிமிஷ நேரம் அங்கேயே நின்று அந்த மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து ரயில் தப்பியது என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும். பிறகு எல்லாரும் திரும்பிச் சென்று அவரவர்களுடைய வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் திரும்பிய போது ரயிலின் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் சிலர் தலையை நீட்டி "என்ன சமாசாரம்" என்று விசாரத்ததும் புதரில் ஒளிந்திருந்த நம் கதாநாயகனுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் 'பப்பப்' 'பப்பப்' என்ற சத்தத்துடன் ரயில் புறப்பட்டது. இருள் சூழ்ந்த இரவில் நீண்ட ரயில் வண்டித் தொடர் போகும் காட்சி ஓர் அழகான காட்சிதான். நின்ற இடத்தில் நிலையாக நிற்கும் தீபவரிசையே பார்ப்பதற்கு எவ்வளவோ ரம்மியமாக இருக்கும். அத்தகைய தீபவரிசையானது இடம் பெயர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்குமானால் அந்த அபூர்வமான காட்சியின் அழகைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா அந்த அழகை யெல்லாம் நம் நள்ளிரவுப் பிரயாணி சிறிதும் விடாமல் அநுபவித்தான். ரயில் வண்டித் தொடரில் கடைசி வண்டியும் தீபவரிசையில் கடைசித் தீபமும் மலை முடுக்கில் திரும்பி மறையும் வரையில் அவன் அந்தக் காட்சியை அடங்காத ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகுதான் அவனுக்குத் தன் சுயநினைவு வந்தது. அவனுடைய மனத்தில் அதற்குமுன் என்றும் அநுபவித்தறியாத அமைதி அச்சமயம் குடி கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் அந்த ரயில் வண்டித் தொடருக்கும் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆண் பெண் குழந்தைகளுக்கும் நல்ல வேளையாக அபாயம் எதுவும் ஏற்படாமல் போனதில் அவனுக்கு அளவில்லாத திருப்தி உண்டாகியிருந்தது.