உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

திடீரென்று ஒளிக் கீற்றுப் படர்ந்தது. அவள் கடை வாயில் புன்முறுவல் இழையோடிற்று. சட்டென்று தன் நாத்தியின் முதுகைத் தட்டினாள். "ஆ ஆ! உன் குறும்புப் பேச்சிலும் எனக்கு ஓர் உபதேசம் கிடைத்தது. ஓர் அற்புதமான யோசனையை வெளியிட்டதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டும்.”

இதை அவள் உண்மையில் மகிழ்ச்சிக் கொந்தளிப்போடு தான் கூறினாள். 'இவள் என்ன எண்ணி இப்படிப் பாராட்டுகிறாள்?'–இளையவளுக்கு அது விளங்கவில்லை.

"என்ன அண்ணி, சொல்லுகிறாய்? திடீரென்று உன் கோபம் மாறிவிட்டதே!" என்று கேட்டாள் அவள்.

"நீ இன்று முத்து முத்தாகப் பேசினாய். அதன் பயனை இதோ பார்க்கப் போகிறாய்" என்று கூறி வேக்மாக நடை போட்டாள் சமீன்தாரிணி.

"என்ன அண்ணி, என்னை மிரட்டுகிறாயா?”

"அடி பேதைப் பெண்ணே! நீ பேசின பேச்சின் அருமை உனக்கே தெரியவில்லை. நான் நடக்கும் இட மெல்லாம் கல் பாவ வேண்டுமென்று சொன்னாயே; அதைத்தான் சொல்கிறேன்.”

"பரிகாசமாக அல்லவா அதைச் சொன்னேன்?"

"அது பரிகாசம் அன்று; உபதேசம். என்னுடன் வா; நடப்பதைக் கவனி. பிறகு எல்லாம் தெரியும்."

வேகமாக இருவரும் நடந்தார்கள். மீட்டும் இறைவன் சந்நிதியை அடைந்தார்கள். சமீன்தாரிணி தன் கையில் வைத்திருந்த சிறிய துண்டை அங்கே விரித்தாள். தன் கை வளையைக் கழற்றி அதில் வைத்தாள். பிறகு காலில் இருந்த அணியைக் கழற்றி வைத்தாள்.

அவள் நாத்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை; "என்ன அண்ணி இது? ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டாள்.