உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

95


அகம் குளிர அணிந்துகொள்வதற்கு அஞ்சினாள். ஓரிரு தடவைகள் வெளிப்படையாக அணிந்து மினுக்கிய போது, பிறர் இயல்பாகவும் ஆச்சரியத்துடனும் அவளை நோக்கினார்கள். அவர்கள் தன்னைக் குற்றம் சாட்டும் பார்வை எறிவதாகவே அவள் மனம் குறுகுறுத்தது. முத்தாரம்' தன்னுடைய உடைமையாகி விட்டதனால் திருப்திகொண்டு அமுதவல்லி அதைத் தன் பெட்டிக்குள்ளேயே வைத்து விட்டாள்.

இப்பொழுது ஆந்தையும், திருமாறனும் அவளுடைய ஆவலைத் தூண்டிவிட்டதால், அமுதவல்லி அந்த முத்து மாலையை எடுத்துத் தனது அழகிய கழுத்தில் அணிந்து கண்ணாடி முன் நின்று கண்டுகளிக்க வேண்டும் என்று ஆசைகொண்டாள்.

வசீகரம் பொருந்திய ஆடை அணிந்து, நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு, முத்து மாலையை எடுத்தாள். அதைக் கையில் பிடித்து அப்படியும் இப்படியும் அசைத்தும், தூக்கிப் பற்றியும் தூரத்தில் வைத்தும், கண்ணருகில் கொண்டுவந்தும் அழகு பார்த்தாள். புதிதாகக் கிடைத்த ஒரு பொம்மையை வைத்து அழகு பார்த்துக் குதூகலிக்கும் சிறு பிள்ளை மாதிரியே அவளும் நடந்துகொண்டாள்.

அவள் அதைக் கழுத்தில் அணிந்துகொள்ளப் போகின்ற தருணத்திலே, 'அம்மா, அம்மா!' என்று பதற்றத்தோடு அழைத்துக்கொண்டு அன்னக்கிளி அங்கு வந்தாள். அமுதவல்லியின் கையிலிருந்த முத்துமாலையைக் கண்டு திகைத்து நின்றாள்.

'அழகாக இருக்கிறது அம்மா. ஆந்தை இதைத்தான் கேட்டானா?" என்று அவள் விசாரிக்கவும், தலைவியின் முகம் மலர்ச்சியைத் துறந்து கடுகடுப்பு ஏற்றது.