பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

407


பதியும் அல்லாதது என்றறியப்பட்டும் தனித்து நிற்காமல், பதியினையோ அன்றிப் பாசத்தையோ சார்ந்து நிற்பதும் ஆன நிலையின் உள்ள உயிரை ஒத்திருக்கின்றது என்பதும், கடிகாரயந்திரங்களிலும், ஒன்பதைக் குறிக்க IX எண், (X-ல்குறைக்க என்றது பொருள்பட) குறியீடு கொள்வதும், பிறவும் இங்கு சிந்திக்கத் தக்கதாகச் சிறக்கின்றதல்லவா?

இங்கே சிவக்கவிமணி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள IX என்னும் எண்முறை ரோமன் எண் முறை வகையைச் சார்ந்தது.

எனவே, வள்ளல் பெருமான் இங்கே தொல்காப்பிய சொற்றொடர்கள் இரண்டுக்கு எடுத்துக் கூறிய கருத்துகளுக்கு மயிலை நாதர், சிவக்கவிமணி என்ற இரண்டு பேரறிஞர்கள் ஆய்ந்த உண்மை அரணாக உள்ளது. இந்த இலக்கண ஆய்வு நுட்பம் எழுத்தாளர்களுக்கும் வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி அருமையை உணர முடியும்.

இனி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்ற எண்களில் தமிழ்ப் பெயர்கள் ஏன் ‘உ’கரத்தில் முடிந்திருக்கிறது என்று வள்ளல் பெருமானே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குக் காரணம் உண்டு என பெருமானே குறிப்பாகத் தெரிவித்துள்ளாரேயன்றி, இதைப்பற்றி அவர் இவ்விடத்தில் கூறவில்லை.

ஆனால், ‘ஓம்’ என்னும் பிரணவத்தில் அகரமாகிய நாதமும், மகரமாகிய பரவிந்தும் அடங்கியுள்ளன என்று வள்ளலார் கூறியுள்ளார்.

‘ஓ’ என்னும் எழுத்திலுள்ள அகரத்தைப் பற்றி வள்ளலார் வேறோரிடத்தில் விளக்கியுள்ளார். உகரம் காத்தல் தொழிலைக் காட்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

உகரம் இனிய வகையில் உயிரை இறைவனிடம் அழைத்துச் சென்றவிடத்து தன் நிலையிலிருந்து ஒருபடி தாழ்ந்தாலும், அது தாழ்த்தப்படும் என்பதை உலகுக்கு உணர்த்த ஒன்பது என்னும் சொல் அமைந்துள்ளது எனவும் கொள்ளலாம்.