சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/இராஜகுல தர்மம்

விக்கிமூலம் இலிருந்து
57. இராஜகுல தர்மம்


மகேந்திர பல்லவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொண்டு அவரைச் சூழ்ந்திருந்த மந்திரிகளும் அமைச்சர்களும் சற்று விலகிச் சென்றார்கள். மறுபடியும் சக்கரவர்த்தி அழைத்தவுடனே திரும்பி வருவதற்கு ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சக்கரவர்த்திக்குச் சமீபமாக மாமல்லரும் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் பரஞ்சோதியும் வணக்கத்துடன் நின்றார்கள். மகேந்திர பல்லவர் படுத்திருந்த மண்டபத்துக்கு ஒரு பக்கத்தில் அந்தப்புரத்தின் வாசல் இருந்தது. மகேந்திர பல்லவர் அங்கே திரும்பி நோக்கியதும் தாதி ஒருத்தி ஓடி வந்தாள். அவளிடம், "மகாராணியை அழைத்து வா!" என்று பல்லவ வேந்தர் ஆக்ஞாபித்தார்.

"பின்னர் மாமல்லரைப் பார்த்து, "குழந்தாய்! நான் கண் மூடுவதற்குள் இரண்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். அதில் ஒன்று நிறைவேறி விட்டது. சிவகாமியின் சபதத்தைப் பூர்த்தி செய்து அவளை வாதாபியிலிருந்து நீ அழைத்து வரும் விஷயத்தில் நமது மந்திரிப் பிரதானிகளால் ஏதேனும் தடை நேராதிருக்கும் பொருட்டு அவர்களிடம் உன் முன்னிலையில் வாக்குறுதி பெற்றுக் கொண்டேன். வாக்குறுதியிலிருந்து அவர்கள் பிறழ மாட்டார்கள். வாதாபிப் படையெடுப்புக்கு உனக்குப் பூரண பக்கபலம் அளிப்பார்கள்" என்றார். மாமல்லர் மறுமொழி எதுவும் சொல்லவில்லை.

"மகனே! நான் செய்ய விரும்பும் இரண்டாவது காரியம் உன்னைப் பொறுத்திருக்கின்றது; நீதான் அதை நிறைவேற்றித் தர வேண்டும். மரணத்தை எதிர்பார்க்கும் சக்கரவர்த்தியின் கோரிக்கையை மந்திரி பிரதானிகள் உடனே ஒப்புக் கொண்டார்கள். என் அருமைப் புதல்வனாகிய நீயும் என் அந்திமகால வேண்டுகோளை நிறைவேற்றித் தருவாயல்லவா?" என்றார் மகேந்திரர்." "அப்பா! என்ன வேண்டுமானாலும் எனக்குக் கட்டளையிடுங்கள்; நிறைவேற்றுகிறேன். கோரிக்கை, வேண்டுகோள் என்று மட்டும் சொல்லாதீர்கள்!" என்றார் மாமல்லர். "குமாரா! இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கூடிய சீக்கிரம் உன் தலையில் சாரப் போகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப் புகழ்பெற்ற காஞ்சிமா நகரின் சிம்மாசனத்தில் நீ வீற்றிருக்கும் காலம் நெருங்கி வந்திருக்கிறது.."

"அப்பா! இவ்விதமெல்லாம் தாங்கள் பேசுவதானால், நான் இங்கிருந்து போய் விட விரும்புகிறேன். எனக்குச் சிம்மாசனமும் வேண்டாம், சாம்ராஜ்யமும் வேண்டாம்; தாங்கள்தான் எனக்கு வேண்டும். நெடுங்காலம் தாங்கள் திடகாத்திரமாக வாழ வேண்டும்..." "மாமல்லா! நம்முடைய கண்களை நாமே மூடிக் கொண்டு எதிரேயுள்ளதைப் பார்க்காமல் இருப்பதில் பயனில்லை. இனி நெடுங்காலம் நான் ஜீவித்திருக்கப் போவதில்லை. அப்படி ஜீவித்திருந்தாலும் திடகாத்திரமாக இருக்கப் போவதில்லை. சாம்ராஜ்ய பாரத்தை இனிமேல் என்னால் ஒரு நிமிஷமும் தாங்க முடியாது. அந்தப் பொறுப்பை நீதான் வகித்தாக வேண்டும்.."

"பொறுப்பு வகிக்க மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே? காஞ்சி சிம்மாசனத்தில் தாங்கள் இருந்து கொண்டு எனக்குக் கட்டளையிடுங்கள், நான் நிறைவேற்றாவிடில் கேளுங்கள்." "நல்லது மகனே! இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் பொறுப்பை நிர்வகிப்பதற்குத் தகுதி பெற வேண்டுமானால் அதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை இருக்கிறது. அதை நீ பூர்த்தி செய்தாக வேண்டும்!" "நிபந்தனையைச் சொல்லுங்கள், அப்பா!" என்றார் மாமல்லர் அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒருவித வேதனை உண்டாயிற்று.

"குழந்தாய்! வளைத்து வளைத்துப் பேசுவதில் என்ன பயன்? நீ எனக்கு ஒரே மகன், வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சம் உன்னோடு முடிவடைந்து விடக்கூடாது. காஞ்சி சிம்மாசனத்தில் ஏறத் தகுதி பெறுவதற்கு நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மாமல்லா! பாண்டிய இராஜகுமாரியை மணந்து கொள். நான் கண்ணை மூடுவதற்குள்ளே நீ இல்லறம் மேற்கொண்டு நான் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் என் மனம் நிம்மதி அடையாது, என் நெஞ்சு வேகாது!" என்றார் சக்கரவர்த்தி.

மேற்படி மொழிகள் மாமல்லரின் இருதய வேதனையை பன்மடங்கு அதிகமாக்கின. அவருடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தியிருந்தால் கூட அத்தனை துன்பம் உண்டாகியிராது. சற்று மௌனமாய் நின்று விட்டு, "அப்பா! ஏன் இப்படி என்னைச் சோதனை செய்கிறீர்கள்? என் மனோநிலை உங்களுக்குத் தெரியாதா? சிவகாமியின் மேல் நான் அழியாத காதல் கொண்டிருப்பதை அறியீர்களா? ஒரு பெண்ணிடம் மனம் சென்ற பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி மணப்பேன்? அப்படிச் செய்வது மூன்று பேருடைய வாழ்க்கையையும் பாழாக்குவதாகாதா? இத்தகைய காரியத்தைச் செய்யும்படி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?" என்று மாமல்லர் கேட்டார். அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் இருதயத்தின் அடிவாரத்திலிருந்து நெஞ்சின் இரத்தம் தோய்ந்து வெளிவந்தது.

மகேந்திர பல்லவர் குமாரனை அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார். பிறகு கனிவு ததும்பும் குரலில் கூறினார்; "ஆம், நரசிம்மா! அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யும்படி தான் சொல்கிறேன். அந்தக் காரியத்தின் தன்மையை நன்கு அறிந்து சொல்கிறேன். கேள், மாமல்லா! இந்த உலகத்தில் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு; இராஜகுலத்தில் பிறந்தவர்களுக்குத் தர்மம் வேறு. சாதாரண ஜனங்கள் தங்களுடைய சொந்த சுகதுக்கங்களை உத்தேசித்துக் காரியம் செய்யலாம். ஆனால் ராஜ குலத்தில் பிறந்தவர்கள் அவ்வாறு செய்வதற்கில்லை. தங்கள் சுகதுக்கங்களை அவர்கள் மறந்துவிட வேண்டும். இராஜ்யத்தின் நன்மையைக் கருதியே இராஜ குலத்தினர் தங்கள் சொந்தக் காரியங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். மாமல்லா! யோசித்துப் பார்! சிவகாமியை நீ மணந்து கொள்வது இனிமேல் சாத்தியமா? வாதாபிக்கு நீ படை எடுத்துப் போவது இன்றோ நாளையோ நடக்ககூடிய காரியமா? வருஷக் கணக்கில் ஆயத்தம் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யுத்தம் எத்தனை காலம் நடக்குமோ, யார் சொல்ல முடியும்? அத்தனை நாளும் நீ கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதற்கும் பல்லவ நாட்டுப் பிரஜைகள் சம்மதிப்பார்களா?"

மாமல்லர் பெருமூச்சு விட்டார்; சிவகாமியின் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் வந்தது. அந்தப் பாதகி தன்னுடன் புறப்பட்டு வர மறுத்ததனால் தானே இப்போது இந்தத் தர்மசங்கடம் தனக்கு நேரிட்டிருக்கிறது! அவருடைய உள்ளப் போக்கை அறிந்து கொண்ட மகேந்திர பல்லவர், "குமாரா! இராஜ குலத்தினர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பாராமல் இராஜ்யத்துக்காகவே எல்லாக் காரியங்களும் செய்தாக வேண்டும் என்று உனக்குச் சொன்னேனல்லவா? அதை நானே என் வாழ்க்கையில் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்போது கூட இராஜ்யத்தின் நன்மைக்காக ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்வதற்கு மனம் துணிந்திருந்தேன். அந்தப் பயங்கரமான காரியம் என்ன தெரியுமா?" என்று மகேந்திர பல்லவர் நிறுத்தினார்.

மாமல்லர் ஒன்றும் புரியாதவராய்த் தாயாரையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தார். "ஆம், குமாரா! இந்த வயதில் உன் தாயாருக்கு இன்னொரு சக்களத்தியை அளிப்பதென்று தீர்மானித்திருந்தேன். நீ வாதாபியிலிருந்து சிவகாமியை இப்போது அழைத்து வந்திருந்தால், அவளை நானே மணந்து கொள்வதென்று முடிவு செய்திருந்தேன்..." என்றதும் மாமல்லர் "அப்பா!" என்று அலறினார். "மாமல்லா! என்னை மன்னித்து விடு! இராஜ்யத்தின் நன்மைக்காகவே அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்யத் துணிந்திருந்தேன். நீ சிவகாமியை மணக்காமல் தடுக்கும் பொருட்டே அவ்விதம் செய்ய எண்ணினேன். உன் அன்னையிடமும் சொல்லி அனுமதி பெற்றேன். ஆனால், அந்தப் புண்ணியவதி வாதாபியிலிருந்து வர மறுத்து என்னை அந்தப் பயங்கரச் செயலிலிருந்து காப்பாற்றினாள்!" மாமல்லருடைய மனம் அப்போது வாதாபி மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் சிவகாமியிடம் சென்றது. 'ஆ! அவள் தம்முடன் புறப்பட்டு வர மறுத்தது எவ்வளவு நல்லதாயிற்று?'

"குமாரா! இப்போது யோசித்துப் பார்! இராஜ்யத்தின் நன்மைக்காக நான் செய்யத் துணிந்ததைக் காட்டிலும் உன்னைச் செய்யும்படி கேட்பது பெரிய காரியமா? பாண்டியகுமாரியை மணப்பதனால் பல்லவ ராஜ்யத்துக்கு எவ்வளவு பலம் ஏற்படும் என்று சிந்தனை செய். நீ செய்வதற்குரிய மகத்தான பிரம்மாண்டமான காரியங்கள் இருக்கின்றன. வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று சளுக்கப் பூண்டை அடியோடு அழித்து வருவதென்பது சாமான்யமான காரியமா? அதற்கு எத்தனை துணைப் பலம் வேண்டும்? தென்னாட்டிலுள்ள எல்லா மன்னர்களும் சேர்ந்து பிரயத்தனம் செய்தாலொழிய அது சாத்தியப்படுமா? ஒரு சத்ருவை வைத்துக் கொண்டு வடக்கே படையெடுத்துச் செல்வது முடியுமா? நரசிம்மா! எந்த வழியில் பார்த்தாலும் பாண்டிய ராஜகுமாரியை நீ மணப்பது மிகவும் அவசியமாகிறது...." இவ்விதம் இடைவிடாமல் பேசிய காரணத்தினால் மகேந்திர பல்லவர் பெருமூச்சு வாங்கினார். அவருடைய கஷ்டத்தைப் பார்த்த புவனமகாதேவி, "பிரபு! இவ்வளவு நேரம் பேசலாமா? வைத்தியர் அதிகம் பேசக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாரே?" என்று சொல்லி விட்டு, மாமல்லனை பார்த்து, "குழந்தாய்! உன் தந்தையை.....என்றாள். அன்னை மேலே பேசுவதற்கு மாமல்லர் இடம்கொடுக்கவில்லை.

"அப்பா! தாங்கள் அதிகமாகப் பேச வேண்டாம். பாண்டியகுமாரியை நான் மணந்து கொள்கிறேன்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார். மகேந்திர சக்கரவர்த்தியின் முகம் மலர்ந்தது. புவனமகாதேவியோ தன் கண்களில் துளித்த கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பினாள். மகேந்திர பல்லவர் சமிக்ஞை காட்டியதும் தளபதி பரஞ்சோதியும் முதல் மந்திரி பிரதானிகளும் அருகில் வந்தார்கள். "தலைவர்களே! அதிக நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன், அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குக் குதூகலச் செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். குமாரச் சக்கரவர்த்திக்கும் பாண்டிய குமாரிக்கும் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. அதே பந்தலில் அதே முகூர்த்தத்தில் சேனாதிபதி பரஞ்சோதிக்கும் கலியாணம் நடைபெறுகிறது!" என்று மகேந்திர பல்லவர் கூறியதும், கேட்டவர்கள் அவ்வளவு பேரும் ஒரே குதூகலமாக மாமல்லர் வாழ்க! சேனாதிபதி வாழ்க!" என்று கோஷித்தார்கள்.