குமாரி செல்வா
ஆசிரியர் பரமசிவம்
அவர்தான் அற்புதமான காதல் கதைகள் எழுதிப் பெயர் பெற்றவர் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!
-'வால் நட்சத்திரம்' பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த காலம் அது.
ஆசிரியரின் பாலிஸியே தனி, சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கத்தனம்தான் அவரது பண்பாடு. அடிச்சு விளாசல், அபாரமாக அளத்தல், சுத்த சுய விளம்பரம், அற்புதப் புதுமை, துணிகர ஸ்டன்ட், திடீர்த் தாக்குதல்-இப்படி விவரிக்கலாம் அவரது குணாதிசயங்களை! அவரது பண்புகள் அத்தனையும் அவர் பத்திரிகையில் வெளிச்சமிடாமல் போகுமா!
பரமசிவத்தின் 'வால் நட்சத்திரம்' ரொம்ப காலம் வால்த்தனம் பண்ணவில்லை. அதன் கடைசி இதழுக்கு முந்திய இதழ் அன்றுதான் பத்திரிகைச் சந்தையிலே பகட்டாகச் சதிராடக் கிளம்பியிருந்தது. அட்டையிலே ஆடும் குமாரியின் அற்புதத் தோற்றம் மின்னியது.
தனது அறையிலே தனியாக உட்கார்ந்திருந்த ஆசிரியருக்குப் பொழுது போகவில்லை. போதிய உற்சாகமில்லை. ஆகவேதான் எழுதியிருந்த வர்ணனை ஒன்றைப் படித்து ரசிப்பதில் ஆழ்ந்திருந்தார்.
பத்திரிகைக்காரர்களையும் வாசகர்களையும் திடுக்கிடும்படி, திகைக்கும்படி, மகிழ்ந்து போகும்படியெல்லாம் செய்யும் திறமை பெற்றிருந்த பரமசிவம் அவ்வளவு உணர்ச்சிகளையும் அனுபவிக்க நேர்ந்தது எதிர்பாரா வகையிலே.
ஆசிரியர் அறையின் ஆடும் கதவு சூறைக் காற்றால் மோதுண்டதுபோல் படீரெனத் திறந்தது. பரமசிவம் எரிந்து விழுவதற்குள் திடும் பிரவேசம் செய்தாள் ஒரு யுவதி. அந்த இதழின் அட்டைச் சித்திரம் நேரடி விஜயம் செய்திருப்பதை உணர்ந்ததும் எரிக்கும் பார்வை சிந்தாமல் இனிய சிரிப்பையே