பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் மாமிச உணவு வகைகள் பக்குவம் செய்யப்பட்டன என்று சொல்லலாம். இதர வீட்டுக்காரர்களில் சிலசில பேருக்கு அசைவ உணவில் ஆசை ஏற்பட்டால், மூச்சுக் காட்டாமல் டவுணுக்குப் போய் முஸ்லிம் ஒட்டல்களில் ஒரு கை பார்த்துவிட்டு (அல்லது, அவர்கள் பாஷையில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு), வெற்றிலை போட்டுக் குதப்பிக் கொண்டு ஊர் திரும்பி விடுவார்கள். படிக்கப் போகிற பிள்ளையாண்டான்களும் என்றைக்காவது ஒருநாள் ஜாலி பண்ணுவது உண்டுதான். சுல்தானியா ஒட்டலில்’ ஒரு பிடி பிடிப்பதும், சிகரெட் புகைப்பதும்தான் அவர்கள் நோக்கின்படி ஜாலி ஆகும். இந்தச் சூழ்நிலையில் துணிச்சலாகச் செயல் புரிந்தவன் வெயிலுதான். தனக்கு வேண்டியதை அவன் தன் வீட்டிலேயே தயாரித்துக் கொண்டான். அடுத்த தாவுதல் ஆக, வெவ்வேறு பெண்கள் அந்த வீட்டுக்கு வந்து போகும் வழக்கத்தை அவன் ஏற்படுத்தினான். எத்தனையோ பேர் வந்தார்கள்; போனார்கள், ஒரு இரவுக்காக; தொடர்ந்து சில இரவுகளுக்கென்று. சில நாட்கள் வீட்டிலேயே தங்கிப் போனவர்கள்..... சில வாரங்கள் இருந்தவர்கள்..... இப்படி எத்தனையோ ரகங்கள். எவளும் அவனுக்கு பூரண திருப்தி அளிக்கவில்லை. கிருஷ்ணாவின் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே அவனை துயரப்படுத்திக் கொண்டிருந்தது, அவன் அதிகம் அதிகமாகக் குடிக்கலானான். வானம் இருண்டு வருது பாட்டை ரசித்துப் பாடிக் கொண்டே இருந்தான். கிருஷ்ணவேணி மதுரையில் 'உணவு விடுதி வைத்து நடத்துகிறாள்; வெற்றிகரமாக வியாபாரம் நடைபெறுகிறது என்ற செய்தி ஒரு நாள் அவனுக்குக் கிடைத்தது. உடனே மதுரைக்குக் கிளம்பிவிட்டான் வெயிலு. மதுரையில் கிருஷ்ணவேணியை அவன் சந்தித்தான். அவள் சந்தோஷமாக இருந்தாள். அவனை வரவேற்று நன்கு உபசரித்தாள். "உனக்கு எதுக்கு இந்தப் பிழைப்பு, கிருஷ்ணா? என்னோடு வந்துவிடு, வீட்டில் எஜமானியாக இரு!" என்று அவன் அவளிடம் சொன்னான். "அதெல்லாம் முடிஞ்சு போன கதை, அது திரும்பி வராது.