பொன்னியின் செல்வன்/கொலை வாள்/பிரம்மாவின் தலை
கொலை வாள் - அத்தியாயம் 32
[தொகு]பிரம்மாவின் தலை
வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டிற்குள் இரண்டாம் முறையாகப் பிரவேசித்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அந்தச் சிறிய வீட்டுக்குள்ளேதான் முதன் முதலாக அவன் இளையபிராட்டி குந்தவையைப் பார்த்தான். அவளுடைய செந்தாமரை வதனத்தையும், வியப்பினால் விரிந்த கரிய பெரிய கண்களையும் பார்த்துத் திகைத்து நின்றான். அவளுடைய தேனினுமினிய தீங்குரல் அவன் செவியில் விழுந்ததும் அங்கேதான். இந்த நினைவுகள் எல்லாம் அலைமோதிக் கொண்டு அவன் உள்ளத்தில் பொங்கி வந்தன. அவற்றினால் அவன் செவிகள் இனித்தன; உள்ளம் இனித்தது; உடல் முழுவதுமே இனித்து சிலிர்த்தது!
சோதிடர் அப்போதுதான் மாலைவேளைப் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் "வா, அப்பனே, வா! வாணர்குலத்து வல்லத்தரையன்தானே?" என்றார்.
"ஆம், சோதிடரே! உம் ஜோசியம் முன் பின்னாக இருந்தாலும் உம்முடைய ஞாபக சக்தி பிரமாதம்!" என்றான் வந்தியத்தேவன்.
"தம்பி சோதிட சாஸ்திரம் பயில்வதற்கு ஞாபக சக்தி மிக அவசியம். கிரகங்கள், நட்சத்திரங்கள், தசைகள், புக்திகள், யோகங்கள் - இவை லட்சம் விதமான சேர்க்கை உள்ளவை. அவ்வளவையும் மனத்தில் வைத்துக்கொண்டு வருஷம், மாதம் நாள், நாழிகை, வினாடி, ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பங்கு நேரம் - இவ்வளவையும் கணக்கிட்டுப் பார்த்தல்லவா சொல்ல வேண்டும்? போகட்டும்; என் ஜோசியம் முன் பின்னாக இருந்தாலும் என்றாயே? அதன் பொருள் என்ன? நான் உனக்குச் சொன்னது ஒன்றும் பலிக்கவில்லையா?"
"அதையும் உங்கள் ஜோசியத்திலேயே கண்டுபிடித்துக் கொள்ள வழியில்லையா?"
"உண்டு, உண்டு! ஜோசியத்தினாலும் கண்டுபிடிக்கலாம்; ஊகத்தினாலும் கண்டுபிடிக்கலாம். உனக்கு நான் கூறியவை பலித்துத்தான் இருக்க வேண்டும். இல்லாவிடில் நீ திரும்பவும் இந்தக் குடிசைக்குள் வருவாயா?"
"ஆமாம், ஆமாம். உம்முடைய சோதிடம் பலிக்கத்தான் செய்தது."
"அப்படிச் சொல்லு! எந்த விதத்தில் பலித்தது, அப்பனே?"
"நீர் எனக்குச் சொன்னது அப்படியே பலித்தது. நீ போகிற காரியம் நடந்தால் நடக்கும்; நடக்காவிட்டால் நடக்காது" என்றீர், அந்தப்படியே நடந்தது. 'நடந்தது' என்று நான் சொல்வதுகூடப் பிசகு. என்னைக் கண்டவுடனேயே ஓட்டம் பிடித்து ஓடிற்று!"
"தம்பி! நீ பெரிய வேடிக்கைக்காரனாயிருக்கிறாய்!"
"உண்மையான வார்த்தை, நான் வேடிக்கைக்காரன் தான்! அத்துடன் கொஞ்சம் கோபக்காரன்!"
"இந்தக் குடிசைக்குள் வரும்போது கோபத்தை வெளியில் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரவேண்டும்."
"அப்படிச் செய்யலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால் உம்முடைய சீடனை வீட்டு வாசலில் காணவில்லை. கோபமூட்டையைத் திண்ணையில் வைத்தால் யாராவது அடித்துக்கொண்டு போய் விட்டால் என்ன செய்கிறது என்று உள்ளே கொண்டு வந்துவிட்டேன். உம்முடைய சீடன் எங்கே சோதிடரே? போன தடவை அவன் என்னை வாசலில் தடுத்து நிறுத்தப் பார்த்தது அப்படியே என் நினைவில் இருக்கிறது!"
"இன்றைக்கு ஐப்பசி அமாவாசை அல்லவா? அதற்காக அவன் கொள்ளிடக்கரைக்குப் போயிருப்பான்."
"அமாவாசைக்கும், கொள்ளிடக் கரைக்கும் என்ன சம்பந்தம்?"
"கொள்ளிடக்கரையில் காலாமுகர்களின் மகா சங்கம் இன்று நடைபெறுகிறது. என் சீடன் காலாமுகத்தைச் சேர்ந்தவன்."
"சோதிடரே! நான் சைவ மதத்தையே விட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்."
"விட்டுவிட்டு..."
"உமது சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி இருக்கிறாரே..."
"திருமலையைச் சொல்கிறாயாக்கும்!"
"ஆம்; அவரிடம் தீட்சை பெற்று உடம்பெல்லாம் நாமத்தைப் போட்டுக்கொண்டு, வீர வைஷ்ணவனாகி விடலாம் என்று உத்தேசிக்கிறேன்."
"அது ஏன் அப்படி?"
"காலாமுகச் சைவர்கள் சிலரைப் பார்த்தேன். இங்கே வருகிற வழியிலே கூடப் பார்த்தேன். அவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் மண்டை ஓடுகளையும் பார்த்த பிறகு சைவத்தை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது."
"தம்பி! எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்திருக்கும் உனக்கு மண்டை ஓடுகளைக் கண்டு என்ன பயம்?"
"பயம் ஒன்றுமில்லை; அருவருப்புதான். போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்வதற்கும் மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?"
"உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?"
"அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ வருத்தப்பட்டார். அவர் கூட மண்டை ஓட்டை மாலையாகப் போட்டுக் கொள்ளவில்லை; கையிலும் எடுத்துக்கொண்டு திரியவில்லையே? காலாமுகர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?"
"வாழ்க்கை அநித்தியம் என்பதே மறந்து விடாமலிருப்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நீயும் நானும் திருநீறு பூசிக்கொள்கிறோமே, அது மட்டும் என்ன? இந்த மனித உடம்பு நிலையானது அல்ல. ஒரு நாள் சாம்பலாகப் போகிறதென்பதை மறந்துவிடாமலிருப்பதற்குத்தானே திருநீறு பூசிக்கொள்கிறோம்!"
"மனித தேகம் அநித்தியம் என்பது சரிதான்; இது எரிந்து சாம்பலாகும்; அல்லது மண்ணோடு மண்ணாகும், சிவபெருமானுடைய திருமேனி அப்படியல்லவே! பரமசிவன் ஏன் கையில் மண்டை ஓட்டை வைத்திருக்கிறார்?"
"தம்பி! சிவபெருமானுடைய கையில் உள்ள மண்டை ஓடு ஆணவத்தைக் குறிக்கிறது. ஆணவத்தை வென்றால் ஆனந்த நிலை ஏற்படும் என்பதைக் காட்டுகிறது. சிவபெருமான் கையில் மண்டை ஓட்டுடன் ஆனந்த நடனம் செய்கிறார் அல்லவா?"
"மண்டை ஓடு எப்படி ஆணவத்தைக் குறிக்கும்? எனக்குத் தெரியவில்லையே?"
"உனக்குத் தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தம்பி! மண்டை ஓடு ஆணவத்தைக் குறிப்பது எப்படி என்பதை மட்டும் இப்போது தெரிந்துகொள். பிரம்மதேவனும், திருமாலும் ஒருசமயம் கர்வம் கொண்டார்கள். 'நான் பெரியவன்; நான்தான் பெரியவன்' என்று சண்டையிட்டார்கள். சிவன் அவர்களுக்கு நடுவில் வந்தார். 'என்னுடைய சிரசை ஒருவரும் என்னுடைய பாதத்தை ஒருவரும் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள்; யார் பார்த்துவிட்டு முதலில் வருகிறாரோ, அவர்தான் உங்களில் பெரியவர்' என்றார். மகாவிஷ்ணு வராக உருவங்கொண்டு சிவனுடைய பாதங்களைப் பார்ப்பதற்குப் பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பிரம்மா அன்னப் பறவையின் உருக்கொண்டு வானத்தில் பறந்து சென்றார். திருமால் திரும்பி வந்து சிவனுடைய அடியைக் காண முடியவில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார். பிரம்மா திரும்பி வந்து சிவனுடைய முடியைப் பார்த்து விட்டதாகப் பொய் சொன்னார்! அப்போது சிவன் பிரம்மாவுக்கிருந்த ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி எடுத்து அவரைத் தண்டித்தார். ஆணவம் காரணமாகப் பிரம்மா சண்டையிட்டுப் பொய் சொன்னபடியால், அவருடைய தலை ஆணவத்துக்குச் சின்னமாயிற்று...."
வந்தியத்தேவன் எதையோ நினைத்துக் கொண்டவன் போல் இடிஇடி என்று சிரித்தான்.
"என்னத்தைக் கண்டு இப்படி சிரிக்கிறாய், தம்பி!"
"ஒன்றையும் கண்டு சிரிக்கவில்லை. ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது; அதனால் சிரித்தேன்."
"அது என்ன விஷயம்? இரகசியம் ஒன்றுமில்லையே?"
"இரகசியம் என்ன? பிரம்மாவைத் தண்டித்ததுபோல் என்னையும் தண்டிப்பதாயிருந்தால், குறைந்த பட்சம், பதினாயிரம் தலையாவது எனக்கு இருந்தால்தான் சரிக்கட்டி வரும்! அதை எண்ணித்தான் சிரித்தேன்."
"அத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாயாக்கும்!"
"ஆம், சோதிடரே! அது என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது. பொன்னியின் செல்வரைச் சந்தித்த பிறகு உண்மையே சொல்வதென்று தீர்மானித்திருந்தேன். ஒரு தடவை ஒரு முக்கியமான உண்மையையும் சொன்னேன். அதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள்; ஒருவரும் நம்பவில்லை!"
"ஆம்; தம்பி! காலம் அப்படிக் கெட்டுப் போய்விட்டது. இந்த நாளில் பொய்யையே ஜனங்கள் நம்புவதில்லை; உண்மையை எப்படி நம்பப் போகிறார்கள்?"
"உம்முடைய ஜோதிடத்தின் கதியும் அப்படித் தானாக்கும்! சோதிடரே! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி நீர் கூறியது நினைவிருக்கிறதா! வானத்திலே வடதிசை அடிவாரத்தில் நிலைத்து நின்று ஒளிரும் துருவ நட்சத்திரம் போன்றவர் பொன்னியின் செல்வர் என்று நீர் சொல்லவில்லையா?"
"சொன்னேன்; அதனால் என்ன?"
"அவரைப் பற்றிய செய்தியை நீர் கேள்விப்படவில்லையா?"
"கேள்விப்படாமல் எப்படி இருக்க முடியும்? நாடு நகரமெல்லாம் அதே பேச்சாகத்தானே இருக்கிறது?"
"துருவ நட்சத்திரம் கடலில் மூழ்கிவிட்டதென்று நீர் கேள்விப்பட்டதுண்டா?"
"துருவ நட்சத்திரம் கடலில் மூழ்காது. ஆனால் அந்த நிலைகுலையா நட்சத்திரத்தையும் மேகங்கள் சில சமயம் மறைக்கலாம், அல்லவா? இன்றைக்குக்கூட வட திசையில் மேகங்கள் குமுறுகின்றன இன்று இரவு நீ எவ்வளவு முயன்றாலும் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாது. அதனால் அந்த நட்சத்திரம் இல்லாமற் போய்விடுமா?"
"அப்படியா சொல்கிறீர்? பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையான செய்தி ஏதாவது உமக்குத் தெரியுமா?"
"எனக்கு எப்படித் தெரியும்? நீதான் அவருடன் கடைசியாகக் கடலில் குதித்தாய் என்று பேச்சாயிருக்கிறது. தெரிந்திருந்தால், உனக்கு அல்லவா தெரிந்திருக்கவேண்டும். உன்னைக் கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்."
வந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பி, "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?" என்று வினவினான்.
"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.
வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.
"அதெல்லாம் போகட்டும், சோதிடரே! இராஜ குலத்தாரின் விஷயம் நமக்கு என்னத்திற்கு? நான் இப்போது மேற்கொண்டு போகும் காரியம் எப்படி முடியும், சொல்லுங்கள்!"
"முன்னே உனக்குச் சொன்னதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது அப்பனே! எத்தனையோ விபத்துக்கள் உனக்கு வரும்; அவற்றையெல்லாம் வெற்றி கொள்வதற்கு எதிர்பாராத உதவி கிடைக்கும்!" என்றார் சோதிடர்.
இப்போது வாசலில் வந்து கொண்டிருப்பது விபத்தா, உதவியா என்று வந்தியத்தேவன் எண்ணமிட்டான். ஏனெனில் அச்சமயம் வாசலில் ஆடவர்களின் குரல்களுடன், பெண்களின் குரல்களும் கேட்டன. இருவரும் வாசற்புறத்தை நோக்கினார்கள்.
மறுநிமிடம் வானதி தேவியும் அவளுடைய பாங்கியும் உள்ளே வந்தார்கள்.
வந்தியத்தேவன் எழுந்து நின்று மரியாதையுடன் "தேவி! மன்னிக்க வேண்டும்! தாங்கள் இங்கே வரப்போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால், நான் வந்திருக்கமாட்டேன்!..." என்றான்.