உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 46

விக்கிமூலம் இலிருந்து


46-ஆம் அதிகாரம்
ஊருக்குத் திரும்புதல்—துக்கப்படுகிறவர்கள்
முடிவில் சுகம் அடைவார்கள்

நாங்கள் ஆதியூருக்குப் போய் ஒரு நாள் தங்கி யிருந்து, மறு நாள் தேவராஜ பிள்ளை முதலானவர்களிடத்தில் அநுக்ஞை பெற்றுக் கொண்டு சத்தியபுரிக்குப் பயணப் பட்டோம். நாங்கள் போகிற மார்க்கங்களில் உள்ள ஊர்களில், வைசூரி கண்டு, அநேக ஜனங்கள் மடிந்து போனார்கள். சில பிரேதங்கள் எடுத்து அடக்கஞ் செய்யப் பாத்தியஸ்தர்களில்லாமல் நாங்கள் செலவு கொடுத்துச் சேமிக்கும்படிச் செய்வித்தோம். ஆதியூருக்கும் சத்தியபுரிக்கும் நடு மத்தி யமான சந்திரகிரி யென்னும் ஊர் வழியாக நாங்கள் போகும்பொழுது ஞானாம்பாளுக்கு அம்மைக் கொப்புளங்கள் உண்டாகி எங்களுடைய பயணத்தை நிறுத்தும்படியாகச் சம்பவித்தது. ஞானாம்பாளுக்கு அந்தப் பயங்கரமான வியாதி கண்டவுடனே எங்களுக்கு உண்டான பயத்தையும் வியாகூலத்தையும் நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அந்த ஊரிலே வசிக்கிறதற்குத் தகுந்த சத்திரமாவது சாவடியாவது இல்லாமலிருந்தபடியால், நாங்கள் கூடாரம் அடிக்க யத்தனமாயிருந்தோம். அப்போது “அம்மை கண்டவர்களையெல்லாம் அந்த ஊரிலுள்ள கவர்ன்மெண்டு வைத்திய சாலைக்குக் கொண்டுபோய் வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும், அப்படிச் செய்யாமல் வீடுகளிலாவது மார்க்கங்களிலாவது அந்த வியாதியஸ்தர்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கவர்ன்மெண்டால் தண்டோரா மூலம் விளம்பரஞ் செய்தார்கள். ஞானாம்பாளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோக மனமில்லாமல் நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அவள் வியாதியாயிருப்பது எப்படியோ சில இங்கிலீஷ் டாக்டர்களுக்குத் தெரிந்து அவர்கள் எங்களிடத்தில் வந்து அம்மை கண்ட ஸ்திரீகளுக்கு வைத்தியசாலையில் இங்கிலீஷ் துரைசானிகள் (English Doctors) வைத்தியஞ் செய்வதால் ஒரு குறைவும் உண்டாகாதென்றும், ஞானாம்பாளை உடனே வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டுமென்றும் முஷ்கரஞ் செய்தார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் ஞானாம்பாளை வைத்தியசாலையிற் கொண்டுபோய் விட்டோம். அந்த டாக்டர்கள் எங்களுடைய அந்தஸ்தைத் தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி ஞானாம்பாளை ஒரு தனி அறையில் வைத்து இங்கிலீஷ் துரைசானிகளைக் கொண்டு சகல பக்குவங்களுஞ் செய்வித்தார்கள். அது தொத்து வியாதியானதால் நாங்கள் அடிக்கடி போய் ஞானாம்பாளைப் பார்க்கிறதற்கு வைத்தியர்கள் இடங்கொடுக்க வில்லை. அதனால் எங்களுக்கு உண்டான சஞ்சலம் கொஞ்சம் அல்ல. எங்களுடைய பிராணங்களையும் ஆஸ்திகளையும் ஒன்றாகத் திரட்டி அந்த வைத்தியசாலையில் வைத்திருந்தால் எப்படியோ அப்படிப் போல நாங்கள் ஒரு பக்கத்திலும் தரியாமல் இரவும் பகலும் அந்த வைத்திய சாலையைச் சுற்றிக்கொண்டே திரிந்தோம்.

ஞானாம்பாள் பதினைந்து நாள் வியாதியாயிருந்தாள். அந்தப் பதினைந்து நாளும் பதினைந்து யுகம் போல இருந்தது. வைத்தியர்கள் எங்களைக் காணும் போதெல்லாம் “சௌக்கியம் ஆகும். சௌக்கியம் ஆகும்” என்று தாது புஷ்டியாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பதினாறாம் நாள் வைத்தியர்கள் எங்களைக் கண்டவுடனே அழுதுகொண்டு “காரியம் மிஞ்சிப்போய் விட்டது.. வியசனப்பட வேண்டாம்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனே ஆயிரம் இடி எங்கள் தலைமேலே விழுந்ததுபோல அடித்து மோதிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு பொருமினோம்; புலம்பினோம்; பதறினோம்; கதறினோம். இன்னும் பல பெயர்கள் இறந்துபோய் விட்டதால் அந்த வைத்தியசாலைச் சுற்றிலும் அழுகைக் குரலேயல்லாமல் வேறு குரல் இல்லை. இத்தனை பெயர்களைக் கொண்டுபோன அந்த வியாதி எங்களையும் வந்து கொண்டு போகாதாவென்று எத்தனையோ தரம் பிரார்த்தித்தோம். அந்தத் துர்வியாதி எங்களை நாடவில்லை. ஞானாம்பாளுடைய உத்தரக் கிரியைகளைச் செய்யும்படி பிரேதத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். அம்மையினால் இறந்து போகிற பிரேதங்களை வெளியே கொண்டுபோகாமல் அந்தக் கொல்லையிலே அடக்கஞ் செய்யும்படி மேலான அதிகாரிகள் உத்தரவு செய்திருப்பதாகவும் ஆகையால் பிரேதத்தைக் கொடுக்க மாட்டோமென்றுஞ் சொன்னார்கள். பிரேதத்தைக் கைப்பற்றுகிறதற்கு நாங்கள் எவ்வளவோ பிரயாசைப்பட்டும் பயன்படவில்லை. அம்மை மும்முரமாயிருக்கிற அந்த ஊரில் ஒருவரும் இருக்கக் கூடாதென்றும், உடனே அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட வேண்டுமென்றும் அதிகாரிகள் ஒரு பக்கத்தில் நிர்ப்பந்தித்தார்கள். ஞானாம்பாள் வியாதியாயிருக்கும்போது அவளுக்கு எங்கள் கையாலே பக்குவங்கள் செய்யக் கூடாமலும் அவள் இறந்த பிறகு அவள் முகத்திலே கூட விழிக்கக் கூடாமலும் அவளுடைய பிரேதத்தையாவது எங்கள் கையிலே எடுத்து அடக்கஞ் செய்வதற்குக் கூட இடமில்லாமலும் போய்விட்டதால் நாங்கள் பட்ட துயரம் இவ்வளவு என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. நான் உடனே மெய்சோர்ந்து மூர்ச்சித்து ஸ்மரணை தப்பிப் போய்விட்டேன். அப்பால் நடந்தது யாதொன்றும் எனக்குத் தெரியாது. சத்தியபுரிக்குப் போனபிறகு தான் எனக்கு மயக்கந் தெளிந்து நல்ல நினைவு வந்தது. அப்போது என் தாய் தந்தையர் முதலானவர்கள் எல்லோரும் என் படுக்கையைச் சுற்றி அழுதுகொண்டு நின்றார்கள். நான் கண்ணை விழித்த உடனே என் தாயாரைப் பார்த்து யுஞானாம்பாள் எங்கே அம்மா?” என்றேன். அவர்களும் மற்றவர்களும் ஒன்றுஞ் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் மறுபடியும் மெய்சோர்ந்து மெய் கலங்கி அறிவு தடுமாறித் துக்கித்தேன். எங்களுடைய வீட்டில் ஞானாம்பாள் இருந்த இடத்தையும் அவள் கட்டின வஸ்திரங்களையும் அவள் படித்த புஸ்தகங்களையும் மற்றச் சாமான்களையும் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கரைந்தேன். சத்தியபுரியில் உள்ளவர்கள் எல்லாரும் நித்தியமும் வந்து ஞானாம்பாள் ரகசியத்திலே செய்து வந்த தானங்களையும் தருமங்களையுஞ் சொல்லிச் சொல்லி, எங்களுடைய துக்கங்களைப் புதுப்பித்தார்கள். ஞானாம்பாளை நினைத்து அழாதவர்கள் ஒருவரும் இல்லை. ஏழைகள் எல்லாரும் “““எங்களுடைய இரக்ஷகி போய்விட்டாளே!““” என்று ஏங்கினார்கள். செல்வர்கள் எல்லாரும் “எங்கள் சீமாட்டி போய்விட்டாளே!” என்று தேம்பினார்கள். மாதர்கள் எல்லாரும் ““எங்கள் மனோன்மணி போய்விட்டாளே!”” என்று மயங்கினார்கள். புருஷர்கள் எல்லாரும் “பூவையர்க்கரசி போய் விட்டாளே!” என்று புலம்பினார்கள். பாவலர்கள் எல்லாரும் “எங்கள் பாக்கியம் போய்விட்டதே!” என்று பதறினார்கள். உதயாஸ்தமன சமயங்களில் சூரியன் சிவந்த வர்ணமாயிருப்பதைப் பார்த்தால், ஞானாம்பாளுக்காகச் சூரியன் அழுது, அழுது, கண்ணும் முகமுஞ் சிவந்து போனதாகத் தோன்றிற்று. வானத்தில் நின்று விழுகிற பனி நீரினால் வானமும் அழுவதாகத் தோன்றிற்று. மலையருவிகளை பார்க்கும் போது மலையும் அழுவதாக விளங்கிற்று. சமுத்திரமும் அழுவது போல் சப்தித்துக் கொண்டிருந்தது. என்னுடைய துயர மிகுதியினால் சகல ஜீவகோடிகளும் ஸ்தாவர ஜங்கமங்களும் அழுவது போலவே காணப்பட்டன.

என் தாயார் எனக்குப் பல சமயங்களில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் வாயைத் திறக்கும் போதெல்லாம், அழுகையுந் துக்கமும் அடைத்துக் கொண்டு, அவர்களைப் பேச ஒட்டாமல் செய்துவிட்டது. கடைசியாக அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு சொல்லுகிறார்கள்:- “மகனே! கடந்துபோன காரியத்தை நினைத்து அநுதாபப்பட்டு லாபம் என்ன? நாம் எவ்வளவுதான் அழுதாலும் ஞானாம்பாள் வரப் போகிறாளா? உலகத்தில் பிறக்கிறதும் இறக்கிறதும் சகஜமேயல்லாமல் நூதனமான காரியம் என்ன இருக்கிறது? நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் இறந்து போனார்களே! நாமும் ஒரு நாள் இறந்து போகவேண்டியவர்கள் தானே! நம்மை வீடு போ, போ என்கிறது. காடு வா வா என்கிறது.

காலம் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது ஓடும்பொழுது நம்முடைய ஆயுசையும் வாரிக்கொண்டு போகிறது. நாள், வாரம், மாசம், ஆண்டு என்று பல ரூபம் எடுத்துப்போவது நம்முடைய ஆயுசேயன்றி வேறென்ன? சிறியோர்களாயிருந்தாலும், பெரியோர்களாயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும், தனவான்களாயிருந்தாலும் ஒருவரையும் மரணம் விடுவதில்லை. செத்துப்போன பிணத்துக்காக இனிமேல் இறக்கப்போகிற பிணம் கத்துகிறதென்று பட்டணத்துப் பிள்ளை சொன்னது உண்மை தானே! இதற்கு நூறு வருஷத்திற்கு முன் இருந்த ஜனங்களில் யாராவது ஒருவர் இப்போது இருக்கிறார்களா? அவர்கள் எல்லாரும் இறந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் இப்போது உலகத்தில் வசிக்கிறார்கள். இன்னும் நூறு வருஷத்திற்குள் இப்போது இருக்கிற சகல ஜனங்களும் மடிந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் வருவார்களென்பதற்குச் சந்தேகமா? மரங்களில் இலைகள் பழுத்து உதிர்ந்துபோய்ப் புது இலைகள் உண்டாவதுபோல், உலகத்திலுள்ள ஜனங்கள் புதிது புதிதாக மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். காணப்பட்ட பொருள்களெல்லாம் அழிந்துபோவது நிச்சயமே. பூலோக வாழ்வைப் போல அநிச்சயமான காரியமும் வேறொன்றும் இல்லை. நேற்று இருந்தவர் இன்றைக்கு இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் நாளைக்கு இரார்கள். நாம் அடுத்த நிமிஷத்தில் ஜீவித்திருப்போமென்பது நிச்சயமில்லை.

ஞானாம்பாள் ஊரில் வந்தாவது இறந்து போகாமல், மார்க்கத்தில் இறந்துபோனதற்காக நாம் அதிகமாகத் துக்கிக்கிறோம். அவள் ஊரில் வந்து இறந்துபோனால் நாம் துக்கிக்காமல் இருப்போமா? நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், வீட்டிலிருந்தாலும், எங்கே இருந்தாலும் இறப்பது நிச்சயந்தானே! மரணத்தை யார் தடுக்கக் கூடும்?

தலைமுறை தலை முறையாய்க் கப்பலில் ஜீவனம் செய்கிற ஒரு மாலுமியை அவனுடைய நேசன், ’உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்துபோனான்?’ என்று கேட்டான். ‘கப்பலில் இறந்து போனான்’ என்று மாலுமி சொன்னான். ’உன் பாட்டன் எங்கே இறந்து போனான்?’ என்று சினேகிதன் கேட்க, ’அவனுஞ் சமுத்திரத்திலே இறந்து போனான்’ என்றான். பிறகு ‘உன் தகப்பன் எங்கே இறந்து போனான்?‘ என்று கேட்க, ‘தகப்பனும் கப்பலிலே மாண்டான்‘ என்று மாலுமி சொன்னான். உடனே அந்தச் சிநேகிதன் மாலுமியைப் பார்த்து ‘உன்னுடைய முன்னோர்கள் எல்லாரும் கப்பலிலே இறந்து போனதால், நீயும் கப்பலிலே ஜீவனம் செய்வதால் கப்பலிலே இறந்து போவாய்! ஆகையால் இந்த ஜீவனத்தை விட்டுவிடு‘ என்றான். மாலுமி சற்று நேரம் மௌனமாயிருந்து, பிறகு நேசனைப் பார்த்து ‘உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்தான்?‘ என்றான். சிநேகிதன் ‘என்னுடைய முப்பாட்டன் சமுத்திரத்திலே இறக்கவில்லை. மற்றவர்களைப் போலப் பூமியிலே இறந்தான்‘ என்றான். ‘உன் பாட்டனுந் தகப்பனும் எங்கே இறந்தார்கள்?‘ என்று மாலுமி கேட்க ‘அவர்களும் பூமியில் இறந்தார்கள்‘ என்று சிநேகிதன் மறுமொழி சொன்னான். உடனே மாலுமி அவனைப் பார்த்து ‘உன்னுடைய முப்பாட்டனும், பாட்டனும், தகப்பனும் பூமியில் இறந்துபோனதால், நீ பூமியில் இருப்பது சரியல்ல‘ என்றான். அந்த மாலுமி சொன்னது போல பூமியில் எங்கே இருந்தாலும் சாவது நிச்சயந் தானே. ஒருவன் தன்னுடைய அன்பனைப் பார்த்து ‘உலகத்தில் ஜீவித்திருப்பதும் இறந்து போவதும் இரண்டும் எனக்குச் சமானந்தான்‘ என்றான். அப்படியானால் ‘இறந்து போ‘ என்று சிநேகிதன் சொல்ல ‘இரண்டும் சமானமானதால்‘ நான் ஜீவித்திருக்கிறேன்‘ என்றான். அவன் சொன்னது போல நாம் சாவையும் வாழ்வையும் சமானமாக நினைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்குக் கசப்பான மருந்துகளைக் கொடுத்து, அடித்துத் திருத்தி வளர்க்கிற அன்புள்ள தாய் தந்தையர் போலக் கடவுளும் நம்மைத் திருத்துவதற்காகவே, அநேக சமயங்களில் நமக்குத் துன்பங்களைக் கொடுக்கிறார். நித்தியமான பரலோக பாக்கியம் பெரிதே யன்றி, நீர்க் குமிழி போல் நிலைமை யில்லாத இந்த உலகத்தில், நாம் அநுபவிக்கிற சுகமும் சுகமல்ல; துன்பமும் துன்பம் அல்லவே! கடவுளை நாம் காணாதபடி நம்முடைய தேகமாகிய திரை மறைத்துக் கொண்டிருப்பதால், அந்தத் திரை எப்போது நீங்குமோவென்று புண்ணியவான்களெல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஞானாம்பாளுக்குத் தேகமாகிய திரை நீங்கிவிட்டதால், அவளுக்குக் கடவுளுடைய தரிசனமும் நித்திய பாக்கியமும் கிடைத்திருக்கு மெபதற்குச் சந்தேகம் இல்லை. அவள் நித்தியானந்தத்திற் பிரவேசித்திருப்பது நமக்குச் சம்மதமில்லாதது போல, நாம் அவளுக்காக அழுது பிரலாபிப்பது எவ்வளவும் சரியல்ல. ஞானாம்பாள் போல நாமும் சன்மார்க்கத்தை அனுசரிப்போமானால், நாமும் மோக்ஷ வீட்டிற் பிரவேசித்து, ஞானாம்பாளுடன் நித்திய காலமும் கூடி வாழலாமென்பது சத்தியமே”” என்றார்கள்.

எனக்கு என் தாயார் சொன்ன புத்திமதிகளெல்லாம் நீர் மேல் எழுத்துப் போலவும், கல்லின் மேல் விரைத்த விரை போலவும் பயன்படாமற் போய்விட்டன. எனக்கு ஹிதஞ் சொன்ன என் தாயாரே ஆறுதல் இல்லாமல் ஓயாத மனமடிவுள்ளவர்களா யிருப்பார்களானால் என்னுடைய நிலைமையும் நன் விவரிக்க வேண்டுமா? நாங்கள் கரை காணாத துக்கக் கடலில் அமிழ்ந்தி, கரை ஏறுவதற்கு வழியில்லாமற் கலங்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் தேவராஜப் பிள்ளையும் கனகசபை முதலானவர்களும் எங்களுடைய வீட்டுக்குள்ளே வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் பிராண வியோகமானதைக் குறித்து சந்திரகிரியில் இருந்து நாங்கள் அவர்களுக்குக் கடிதம் அனுப்பினபடியால், அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருப்பார்களென்று நினைத்து, தேவராஜப் பிள்ளையையுங் கனகசபையையும், நான் தனித்தனியே கட்டிக்கொண்டு அழுதேன். அவர்கள் என்னோடுகூட அழவுமில்லை. முகத்தில் துக்கக் குறி விளங்கவுமில்லை. அவர்கள் இரக்கமில்லாத மனுஷர்களென்று நினைத்து நான் முகத்தைச் சுளித்துக்கொண்டு அப்பாற் போய் மௌனமாயிருந்தேன். உடனே தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “சந்தோஷச் செய்தி கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் அழவேண்டாம். உங்களுடைய துக்கத்தை கடவுள் சந்தோஷமாக மாற்றிவிட்டார். எப்படியென்றால் உங்களுடைய துக்கக் கடிதம் வந்தவுடனே நாங்கள் அளவிறந்த துக்காக்கிரந்தர்களாய் உங்களை வந்து கண்டுகொள்வதற்காக உடனே பயணம் புறப்பட்டோம். நாங்கள் சந்திரகிரியில் வந்து சேர்ந்து உடனே ஞானாம்பாள் இறந்தவகையைக் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்குப் போனோம். அம்மை வியாதியின் கடுமையினால் ஞானாம்பாளுக்கு வெகு நேரம் மூச்சு அடங்கியிருந்ததாகவும், அதைக் கொண்டு அவள் இறந்து போனதாக எண்ணி அடக்கத்துக்கு யத்தனஞ் செய்ததாகவும், பிறகு ஸ்வாமி கிருபையினால் ஞானாம்பாளுக்குப் போன பிராணன் திரும்பி வந்து விட்டதாகவும். இன்னமும் அவள் வைத்திய சாலையிலே இருப்பதாகவும், இனி மேல் ஜீவபயமில்லை யென்றும் கேள்விப் பட்டோம். உடனே வைத்தியசாலைக்குள்ளே போய் ஞானாம்பாளையும் பார்வையிட்டுப் பரம சந்தோஷம் அடைந்தோம். ஞானாம்பாளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களை எனக்குத் தெரியுமானதால் ஞானாம்பாளை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதற்காக என் வசத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் “ஞானாம்பாள் மிகவும் துர்ப்பலமாயிருப்பதால் இரண்டு நாளைக்குப் பிறகு அழைத்துக் கொண்டு போகவேண்டும்” என்றார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் மூன்று நாள் வரைக்குங் காத்திருந்து ஞானாம்பாளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஞானாம்பாளும் என்னுடைய மனைவியும் மருமகளும் ஒரு வண்டியில் இதோ வருகிறார்கள். நாங்கள் இந்தச் சந்தோஷச் சமாசாரஞ் சொல்வதற்காக முந்திவந்தோம்” என்றார். அவர் வார்த்தை முடிவதற்குமுன் ஞானாம்பாளும் மற்றவர்களும் வந்து உள்ளே புகுந்தார்கள். நான் என் காதலியைக் கண்டேன். கவலை யெல்லாம் விண்டேன். உள்ளம் பூரித்தேன். உடலம் பாரித்தேன். பரமாற்புதமாக ஞானாம்பாளைப் பிழைப்பித்த ஜகதீசனுடைய பெருங் கருணையை நினைந்து நினைந்து ஆநந்தக் கண்ணீர் சொரிந்து அடிக்கடி மானச பூஜை செய்தேன்.

நாங்கள் எல்லாருந் துக்கக்கடலினின்று கரையேறி ஆநந்த சமுத்திரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, ஆநந்தவல்லியும் அவளுடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். ஞானாம்பாள் இறந்த செய்தி கேட்டது முதல் ஆநந்தவல்லி அழுதழுது முகம் வீங்கிப்போயும் தேகம் இளைத்துப்போயும் இருந்தாள். ஞானாம்பாள் உயிரோடிருப்பதைப் பார்த்தவுடனே ஆநந்தவல்லி என்கிற பெயர் அவளுக்கே தகும் என்று சொல்லும்படியாகப் பிரமானந்தம் அடைந்து தேக பரவசம் ஆனாள். பிறகு ஆண்டிச்சியம்மாளும் அவளுடைய புருஷன், பிள்ளை முதலானவர்களும் வந்து எங்களுடைய சந்தோஷத்தைப் பாகித்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லாரையும் நாங்கள் ஒரு மாசம் வரைக்கும் நிறுத்தி வைத்துக்கொண்டு, ஞானாம்பாள் பிழைத்ததற்காகத் தினந்தோறும் தேவாராதனைகளும், ஏழைகளுக்குத் தானதர்மங்களுஞ் செய்து வந்தோம்.

பல நாளாயினபின் ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாங்க பாவனையாக இப்போது காட்டவேண்டுமென்று ஞானாம்பாளை என் பாட்டியார் முதலானவர்கள் வேண்டினார்கள். ஞானாம்பாளுக்கு எவ்வளவும் இஷ்டமில்லா விட்டாலும் பல பெயர்களுடைய நிர்ப்பந்தத்தினால் ஒரு நாள் ஞானாம்பாள் அரசனைப் போல வேஷம் பூண்டுகொண்டாள். சாக்ஷாத் ராஜவடிவாகவே தோன்றின ஞானாம்பாளைப் பார்த்து எல்லாரும் அதிசயித்துக் கொண்டிருக்கும்போது ஆநந்தவல்லி அகக்களிப்புடனே வந்து ஞானாம்பாளைப் பார்த்து ““அக்கா! என்னை வேண்டி நீங்கள் ஆணாகவே இருந்து விடுங்கள். இனிப் பெண்ரூபம் எடுக்கவேண்டாம்” என்று சொல்லி இரு கைகளையுங் கூப்பிக் கும்பிட்டாள். உடனே சம்பந்த முதலியார் வந்து மகளைப் பார்த்து “ஆம் அம்மா! ஆண் பிள்ளை இல்லையென்று உன் தாயாருக்கும் எனக்கும் உண்டாயிருக்கிற வருத்தந் தீரும் பொருட்டு நீ ஆணாகவே இருந்துவிடு” என்றார். அப்போது நான் ஞானாம்பாளை நோக்கி “இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னைத் தெருவில் விடாதே! ஞானாம்பாள்!” என்றேன். இதைக் கேட்ட உடனே அண்டகடாகமும் வெடிக்கும்படியாக எல்லாரும் துள்ளித் துள்ளி விழுந்து சிரித்தார்கள். நான் விக்கிரமபுரிக்குப் போன உடனே அந்தத் துர்வழக்காளிகளிடத்திலும் காவற் சேவகர்களிடத்திலும் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்பட்ட பாவனையாக வேஷம் போட்டுக் காட்டும்படி என் பாட்டியார் என்னை வேண்டிக் கொண்டார்கள். நான் என் பாட்டியாரைப் பார்த்து “அந்தப் பாவிகளை மனசிலே நினைத்தாலும் எனக்குச் சிம்ம சொப்பனமாயிருக்கிறது. வேடிக்கைக்குக் கூட அந்த வேஷம் போட என் மனந் துணியவில்லை” என்று சொல்லி நிராகரித்து விட்டேன். பிறகு ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லாருந் தனித்தனியே எங்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஊருக்குப் பிரயாணம் ஆனார்கள்.

ஆநந்தவல்லி அவளுக்குப் பந்துவான ராஜகுமாரனைப் பாணிக்கிரகஞ் செய்துகொண்டு க்ஷேமமாயிருக்கிறாள். விக்கிரமபுரிக்குஞ் சத்தியபுரிக்கும் விவாகம் ஆனது போல் அந்த ஊர்கள் ஒன்றையொன்று எப்போதுந் தழுவிக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஊரில் இருக்கிறவர்கள் இந்த ஊருக்கும் இந்த ஊரில் இருக்கிறவர்கள் அந்த ஊருக்கும் அடிக்கடி போக்குவரவாயிருக்கிறார்கள். அப்படியே சத்தியபுரியும் ஆதியூரும் சவுக்கியமாகவே யிருக்கின்றன. என் தாயாருடைய கீர்த்திப் பிரதாபமும் ஞானாம்பாளுடைய கியாதியும் ஐரோப்பா வரைக்கும் எட்டி, சக்கரவர்த்தினி யவர்கள் கிருபை கூர்ந்து யுராஜ ஸ்திரீகள்ரு என்கிற பட்டமுங் கொடுத்து அநேக ஜாகீர்களும் விட்டார்கள். தெய்வானுக்கிரகத்தினாலும் உங்களுடைய ஆசீர்வாத மகிமையினாலும் நாங்கள் சகல சாம்பிராஜ்யங்களும் பெற்றுச் சந்தோஷமாக ஜீவிக்கிறோம். இந்த சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமிஷம் வரையில் ஒரு குறைவும் இல்லாமல் சுக ஜீவிகளா யிருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லாரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்.


முற்றிற்று



கடவுள் வாழ்த்து

அடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங்
கடந்து நின்ற பெரியாளைக் கடுகினுழை சிறியானைத்
தொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க்
படர்ந்தவருள் பிரியானைப் பழிச்சாயோ நாவே [கரியானைப்
பரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே.