216 ஆத்மாவின் ராகங்கள்
'அந்தக் கோடி அறையிலே என் டிரங்குப் பெட்டி இருக்கு... அதைக் கொஞ்சம் இப்பிடிக் கொண்டு வாங்கோ...'
அவன் டிரங்குப் பெட்டியை எடுத்துவந்து பெஞ்சின் மேல் வைத்தான். அவள் அதைத் திறக்கச் சொல்லி ஜாடை காட்டினாள். அவன் அதைத் திறந்தான். பெட்டியைத் திறந்ததுமே சந்தன வாசனையும், ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூர மணமும் கம்மென்று எழுந்தன. பெட்டியில் மேலாக அவளுடைய கண்ணாடி வளைகளும், அதையடுத்து கதர்ப் புடவைகளும் அடுக்கியிருந்தன. அவற்றை ஒதுக்கிவிட்டுக் கீழே அடியில் கையைவிட்டு ஒரு கதர் வேஷ டியையும் துண்டையும், சட்டையையும் மடிப்புக் குலையாமல்
எடுத்தாள் அவள்.
'ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி நீங்க வாசகசாலை மொட்டை மாடியிலே உலர்த்திவிட்டுப் போனது இது. நான் மறுநாள் காத்தாலே பத்திரமா உலர்ந்ததும் எடுத்து மடிச்சு என் பெட்டியிலே வச்சிருந்தேன்...'
அவன் அவற்றை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். வேஷ்டியும், சட்டையும், துண்டும் பரிமளமான நறுமணங்களில் மூழ்கியிருந்தன. அவள் பெட்டியில் அவை இருந்ததால் வந்த மணம் அது. அவளது அந்த சிரத்தையும் ஞாபக சக்தியும் அவன் மனத்தைக் குளிரச் செய்தன.
'இன்னிக்காவது ஈர வேஷ்டியைப் பத்திரமா உலர்த்துங்கோ, நாளைக்குக் கொடுக்கறதுக்கு எங்கிட்டக் கதர் வேஷ்டி சட்டை இல்லே' என்று அந்நிலையிலும் வேடிக்கையாகப் பேச முடிந்தது அவளால். அவன் சிரித்துக் கொண்டே ஈர வேஷ்டியை உலர்த்தப் போனான்.
பிருகதீஸ்வரனும், அவனும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தபோது -