பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

191


ஆ! ஆ! மேற்கூறிய விரிந்த கருத்துகளையெல்லாம் உள்ளடக்கி, "மழை நீரானது ஏனைய உணவுப் பொருள்களை உண்டாக்கித் தானும் (தாகத்திற்கு) உணவாக அமைந்துள்ளது என்னும் சுருத்தை ஒன்றே முக்கால் அடியில் உரைத்துள்ள திருவள்ளுவரின் திறந்தான் என்னே!

ஆயதூஉம் -எழுவாய்; மழை-(பெயர்ப்) பயனிலை, ஆயதும் என்பதில் உள்ள உ (து), ஊஉ (தூஉ) என நீண்டு அளபெடுத்துச் செய்யுளோசையை நிரப்பி அழகு தந்தது என்பர்.

இந்த அளபெடையை வேறு பொருளில் கூறின், அது இன்னும் சிறப்புடைத்து. அதாவது : இடம் நிரப்புவதற்காக இந்த அளபெடை அமைக்கப்பட்ட வில்லை. துப்பு ஆக்குவதோடு துப்பு ஆவதும் ஆகிய எல்லாம் மழை தானையா என்று நீட்டிப் பலகையைத் தட்டி அடித்துப் பேசுவது போன்ற வலியுறுத்தல் பொருளில் 'துப்பாய தூஉம்' என்னும் அளபெடை அமைந்திருப்பதாகக் கொள்ளல் வேண்டும்.

(மண-உரை) பிறிதொன் றுண்பார்க்கு அவர் உண்டற்கான உணவுகளையும் உண்டாக்கித் தன்னை உண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.

(பரி-உரை) உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.

துப்பு என்பது, உண்ணுதல், உணவு, வலிமை என்னும் பொருள்களுடன் திரும்பத் திரும்ப வந்திருப்பதால், இந்த அமைப்பை, 'சொல் பொருள் பின்வரு நிலை அணி என்பர் அணியிலக்கண நூலார்.