சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வாதாபிப் பெரும் போர்
வெகு காலமாய் இல்லாத வழக்கமாக அஜந்தாவில் கலை விழா நடந்து, அரைகுறையாக முடிவுற்று ஒரு மாதத்துக்கும் மேல் ஆயிற்று. அந்த ஒரு மாதமும் வடக்கேயிருந்து வாதாபியை நோக்கி விரைந்து வந்த சளுக்க சைனியத்துக்கும் தெற்கேயிருந்து படையெடுத்து வந்த பல்லவ சைனியத்துக்கும் ஒரு பெரிய போட்டிப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. வாதாபியை முதலில் யார் அடைவது என்கின்ற அந்த விரைவுப் பந்தயத்தில் பல்லவ சைனியமே வெற்றியடைந்தது. வழியில் யாதொரு எதிர்ப்புமின்றித் தங்கு தடையில்லாமல் பொங்கி வரும் சமுத்திரத்தைப் போல் முன்னேறி வந்த அந்தப் பல்லவ சேனா சமுத்திரமானது, சளுக்க சைனியம் வடக்கே இன்னும் ஆறு காத தூரத்தில் இருக்கும்போதே வாதாபியை அடைந்து அந்த மாபெரும் நகரத்தின் கோட்டை மதிலை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது.
திடீரென்று முன்னெச்சரிக்கையில்லாமல் நேர்ந்த அந்தப் பெரு விபத்தினால் வாதாபி மக்கள் கதிகலங்கிப் போனார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தியின் வீர சௌரிய பராக்ரமங்களையும் அவருடைய புகழானது கடல்களுக்கப்பாலுள்ள தூர தூர தேசங்களிலெல்லாம் பரவியிருப்பதையும் எண்ணிப் பெருமிதத்துடனிருந்த வாதாபியின் மக்கள் தங்கள் நாட்டின் மீது இன்னொரு நாட்டு அரசன் படையெடுத்து வரக்கூடும் என்று கனவிலும் கருதவில்லை. சற்றும் எதிர்பாராத சமயத்தில் களங்கமற்ற வானத்திலிருந்து விழுந்த பேரிடி போல் வந்த பல்லவப் படையெடுப்பு அவர்களுக்கு பிரமிப்பையும் திகைப்பையும் உண்டாக்கியது. நகரில் அச்சமயம் சக்கரவர்த்தி இல்லை என்பதும் கோட்டைப் பாதுகாப்புக்குப் போதுமான சைனியமும் இல்லையென்பதும் ஜனங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தன. இதனால் நகர மாந்தரில் பெரும்பாலோர் என்றும் அறியாத பீதிக்கு உள்ளாயினர். பௌத்தர்களிடம் விரோத பாவம் கொண்டிருந்த சமணர்கள், சைவர்கள், சாக்தர்கள் ஆகியோர், "அஜந்தாக் கலை விழா உண்மையிலேயே பௌத்தர்களின் சதியாலோசனைச் சூழ்ச்சி" என்று பேசிக் கொண்டார்கள். பொது மக்களின் கோபத்தாக்குதலுக்கு உள்ளாகாமல் பௌத்த விஹாரங்கள், பௌத்த மடங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றும் பொருட்டு வாதாபிக் கோட்டைத் தலைவன் பீமசேனன் மேற்படி விஹாரங்களுக்கும் மடங்களுக்கும் விசேஷக் காவல் போட வேண்டியதாயிற்று.
அதோடு ஜனங்களின் பீதியைப் போக்கித் தைரியம் ஊட்டுவதற்காகச் சக்கரவர்த்தியிடமிருந்து அவசரத் தூதர்கள் மூலமாக வந்த திருமுக ஓலையை வாதாபி நகரின் நாற்சந்திகளில் எல்லாம் தளபதி பீமன் வாசிக்கப் பண்ணியிருந்தான். சக்கரவர்த்தி, அந்தத் திருமுகத்தில் நர்மதைக் கரையிலுள்ள மாபெரும் சளுக்கர் சைனியத்துடன் தாம் வாதாபியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும், வேங்கி நாட்டிலிருந்து இன்னொரு பெருஞ் சைனியம் வந்து கொண்டிருப்பதாகவும் ஒருவேளை தாம் வருவதற்குள்ளே பல்லவ சைனியம் வாதாபியை அடைந்து முற்றுகையிட்டு விட்டால் அதற்காக நகர மக்கள் மனம் கலங்க வேண்டாம் என்றும், பல்லவ சைனியத்தை நிர்மூலம் செய்து வாதாபியைக் கூடிய சீக்கிரம் முற்றுகையிலிருந்து விடுதலை செய்வதாகவும் உறுதி கூறியிருந்தார். மேற்படி திருமுகத்தை நாற்சந்திகளில் படிக்கக் கேட்ட பிறகு வாதாபி மக்கள் ஒருவாறு பீதி குறைந்து தைரியம் பெற்றார்கள்.
நர்மதை நதிக்கரையிலிருந்த சளுக்கப் பெரும் படையுடன் புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபிக்கு நாலு காத தூரத்தில் வந்து சேர்ந்த போது தமக்கு முன்னால் பல்லவ சைனியம் வாதாபியை அடைந்து கோட்டையைச் சூழ்ந்து கொண்டது என்ற விவரம் அறிந்தார். உடனே பிரயாணத்தை நிறுத்திக் கொண்டார். வேங்கி சைனியம் வழியிலே பல காடு மலை நதிகளைக் கடந்து வர வேண்டியிருந்தபடியால் அது வந்து சேர இன்னும் சில காலம் ஆகும் என்றும் தெரியவந்தது. இந்த நிலைமையில் புலிகேசிச் சக்கரவர்த்தி தமது மந்திரிகளையும் படைத் தலைவர்களையும் கலந்தாலோசித்து உடனே போர் தொடங்காமல் சில நாள் காத்திருக்க முடிவு செய்தார். வேங்கி சைனியமும் வந்து சேர்ந்த பிறகு பல்லவ சைனியத்தை ஒரு பெருந்தாக்காகத் தாக்கி நிர்மூலம் செய்து விடுவது என்றும், அது வரையில் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்திலேயே தங்குவது என்றும் தீர்மானித்திருந்தார். ஆனால், அவருடைய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குப் போர்க் கலையில் மகா நிபுணர்களான மாமல்லச் சக்கரவர்த்தியும் சேனாதிபதி பரஞ்சோதியும் இடங்கொடுக்கவில்லை.
முதலிலே வாதாபிக் கோட்டையைத் தாக்குவதா அல்லது புலிகேசியின் தலைமையிலுள்ள சளுக்கப் பெரும் படையைத் தாக்குவதா என்ற விஷயம் பல்லவ சேனைத் தலைவர்களின் மந்திராலோசனைச் சபையில் விவாதிக்கப்பட்டது. வந்த காரியம் வாதாபியைக் கைப்பற்றுவதேயாதலால் உடனே கோட்டையைத் தாக்க வேண்டுமென்று மானவன்மரும் அச்சுதவர்மரும் அபிப்பிராயப்பட்டார்கள். வேங்கி சைனியம் வருவதற்குள்ளே புலிகேசியைத் தாக்கி ஒழித்து விட வேண்டும் என்றும், வாதாபிக் கோட்டை எங்கேயும் ஓடிப் போய் விடாதென்றும், அதன் முற்றுகை நீடிக்க நீடிக்கப் பிற்பாடு அதைத் தாக்கிப் பிடிப்பது சுலபமாகி விடுமென்றும் சேனாதிபதி பரஞ்சோதி கூறினார். ஒற்றர் தலைவன் சத்ருக்னன் சேனாதிபதியை ஆதரித்தான். மாமல்லரும் அந்த யோசனையையே முடிவாக ஒப்புக் கொண்டார். எனவே, வாதாபிக் கோட்டையின் முற்றுகைக்கு ஒரு சிறு படையை மட்டும் நிறுத்தி விட்டு, பல்லவ சைனியத்தின் மற்றப் பெரும் பகுதி வடக்கு நோக்கிக் கிளம்பிற்று.
இதையறிந்த புலிகேசிச் சக்கரவர்த்தி இனித் தாம் பின்வாங்கிச் சென்றால் சளுக்க சாம்ராஜ்யத்தின் மதிப்பு சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்ந்து போருக்கு ஆயத்தமானார். வாதாபிக்கு வடக்கே மூன்று காத தூரத்தில் இரு பெரும் சைனியங்களும் கைகலந்தன. அந்தக் காட்சியானது கீழ் சமுத்திரமும் மேல் சமுத்திரமும் தங்குதடையின்றிப் பொங்கி வந்து ஒன்றோடொன்று மோதிக் கலந்ததைப் போலிருந்தது. மூன்று பகலும் இரவும் கோரமான யுத்தம் நடந்தது. ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வாளால் வெட்டுண்டும் வேல்களால் குத்துண்டும் போர்க்களத்தில் மாண்டு விழுந்தார்கள். வீர சொர்க்கம் அடைந்தவர்களின் சவங்கள் கால் வேறு கை வேறு தலை வேறான உயிரற்ற உடல்கள், போர்க்களத்தில் மலை மலையாகக் குவிந்தன.
இறந்த யானைகளின் உடல்கள் ஆங்காங்கு கருங்குன்றுகளைப் போல் காட்சி தந்தன. மனிதர் உடல்களின் மீது குதிரைகளின் உடல்களும், குதிரைகளின் சவங்கள் மீது மனிதர்களின் பிரேதங்களுமாகக் கலந்து கிடந்தன. மரணாவஸ்தையிலிருந்த மனிதர்களின் பரிதாப ஓலமும் யானைகளின் பயங்கரப் பிளிறலும் குதிரைகளின் சோகக் கனைப்பும் கேட்கச் சகிக்கார கோரப் பெருஞ்சப்தமாக எழுந்தது. போர்க்களத்திலிருந்து இரத்த ஆறுகள் நாலா பக்கமும் பெருக்கெடுத்துப் பாய்ந்து ஓடின. அந்த உதிர நதிகளில் போர் வீரர்களின் வெட்டுண்ட கால் கைகள் மிதந்து சென்றது பார்க்கச் சகிக்காத கோரக் காட்சியாயிருந்தது. லட்சக்கணக்கான வீரர்களும் ஆயிரம் பதினாயிரக்கணக்கான யானைகளும் குதிரைகளும் ஈடுபட்டிருந்த அந்த மாபெரும் யுத்தத்தை நடந்தது நடந்தபடி வர்ணிப்பது நம்மால் இயலாத காரியம். வால்மீகியையும் வியாசரையும் ஹோமரையும் கம்பரையும் போன்ற மகா நாடக ஆசிரியர்களுக்குத்தான் அதன் வர்ணனை சாத்தியமாகும்.
போரின் ஆரம்பத்திலிருந்தே ஒருவாறு கட்சிகளின் பலம் தெரிந்து விட்டது. போர்க் கலையின் நுட்பங்களை அறிந்தவர்கள், போரின் முடிவு என்ன ஆகும் என்பதை ஊகித்துணர்வதும் சாத்தியமாயிருந்தது. வாதாபிக்கருகில் தங்கிச் சிரம பரிகாரம் செய்து கொண்டு பூரண பலத்துடனும் அளவில்லா உற்சாகத்துடனும் போரில் ஈடுபட்ட பல்லவ சைனியத்தின் பெருந் தாக்குதலுக்கு முன்னால், நெடுந்தூர இடைவிடாப் பிரயாணத்தினால் களைப்புற்றிருந்த சளுக்க சைனியம் போர்க்களத்தில் நிற்பதற்கே திணறியது. சளுக்க சைனியத்தின் பிரதான யானைப் படை வேங்கியில் இருந்தபடியால் அது வந்து சேராதது சளுக்க சைனியத்தின் பலக் குறைவுக்கு முக்கிய காரணமாயிருந்தது.
மூன்றாம் நாள் காலையில் பல்லவ சைனியத்தின் வெற்றியும் சளுக்க சைனியத்தின் தோல்வியும் சர்வ நிச்சயமாகத் தெரிந்து விட்டது. அன்று மத்தியானம் சளுக்க தளபதிகளும் மந்திரிகளும் புலிகேசிச் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டு, சாம்ராஜ்யத்தின் நன்மைக்காக அவர் பின்வாங்கிச் சென்று எங்கேயாவது ஒரு பத்திரமான இடத்தில் வேங்கி சைனியம் வந்து சேரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார்கள். அதைத் தவிர வேறு வழியில்லையென்பதைக் கண்டு சக்கரவர்த்தியும் அதற்குச் சம்மதித்தார். சேதமாகாமல் மீதமிருந்த குதிரைப் படையின் பாதுகாப்புடன் அன்றைய தினம் அஸ்தமித்ததும் சக்கரவர்த்தி பின்வாங்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்படி முடிவைக் காரியத்தில் நிறைவேற்ற அன்று சாயங்காலம் ஒரு பெரும் இடையூறு ஏற்பட்டது. மானவன்மரால் விசேஷப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்த பல்லவக் களிற்றுப் படையைக் கடைசியாக உபயோகிப்பதென்று வைத்திருந்து அன்று சாயங்காலம் ஏவி விட்டார்கள்.
ஐயாயிரம் மத்தகஜங்கள் துதிக்கைகளிலே இரும்பு உலக்கையைப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு சளுக்கர் குதிரைப் படை மேல் பாய்ந்த போது, பாவம், அந்தக் குதிரைகள் பெரும் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடின. அந்தக் குதிரைகளை விட வேகமாக எஞ்சியிருந்த சளுக்க வீரர்கள் ஓடினார்கள். அவ்விதம் புறங்காட்டி ஓடிய சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்திக் கொண்டு ஓடினார்கள். அந்த மூன்றாம் நாள் இரவு முழுவதும் ஓடுகிற சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்திச் சென்று வேட்டையாடுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுநாள் சூரியோதயமான போது, மூன்று தினங்கள் கடும் போர் நடந்த பயங்கர யுத்த களத்தில் இறந்து போன சளுக்கரின் உடல்களைத் தவிர உயிருள்ள சளுக்கர் ஒருவராவது காணப்படவில்லை.
வெற்றி முரசுகள் முழங்க, சங்கங்கள் ஆர்ப்பரித்து ஒலிக்க, ஜயகோஷங்கள் வானளாவ, ஒரே கோலாகலத்துக்கு மத்தியில் பல்லவ சக்கரவர்த்தியும் அவருடைய தளபதிகளும் ஒருவருக்கொருவர் வாகை மாலை சூடியும் வாழ்த்துக் கூறியும் பல்லவ சேனை அடைந்த 'மாபெரும் வெற்றியைக் கொண்டாடினர். எனினும், அவ்வளவு கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அவர்களுடைய உள்ளத்தில் ஒரு சிறு கவலை குடிகொண்டிருந்தது. அது சளுக்க சக்கரவர்த்தி புலிகேசியின் கதி என்னவாயிற்று என்ற கவலைதான். வாதாபிச் சக்கரவர்த்தி போர்க்களத்தில் இறுதி வரை நின்று போராடி உயிரிழந்து விழுந்து வீர சொர்க்கம் அடைந்தாரா, அல்லது சளுக்க வீரர் பலர் புறங்காட்டி ஓடிப் போனதைப் போல் அவரும் ஓடி விட்டாரா என்பது தெரியவில்லை. போர்க்களத்தில் அவர் விழுந்திருந்தால் மாபெருஞ் சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளை அவருடைய உடலுக்குச் செய்து கௌரவிக்க வேண்டும். ஒருவேளை அவர் ஓடிப் போயிருந்தால், மறுபடியும் படை திரட்டிக் கொண்டு போருக்கு வரக்கூடுமல்லவா? இப்படி நடந்திருக்குமா அப்படி நடந்திருக்குமா என்று வெகு நேரம் விவாதித்த பிறகு, அதைப் பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லையென்ற முடிவு ஏற்பட்டது. சத்ருக்னனுடைய தலைமையில் போர்க்களமெல்லாம் நன்றாகத் தேடிப் பார்த்துப் புலிகேசியின் உடல் கிடைத்தால் எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்து விட்டு மாமல்லரும் மற்றவர்களும் வாதாபியை நோக்கித் திரும்பினார்கள்.