பக்கம்:அருளாளர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32*அருளாளர்கள்


என்று மற்றொரு இடத்திலும் கூறுகிறார்.

இந்த அணுவைப் பற்றிய விஞ்ஞானம் கண்ட மற்றோர் உண்மையும் இங்கே கருதப்பட வேண்டும். அணு என்பதனுள் புரோட்டான் என்ற பொருளைச் சுற்றி எலக்ட்ரான் என்ற ஒரு சிறு பொருள் மிக மிக வேகமாகச் சுற்றி வருதலை விஞ்ஞானம் நிரூபித்தது. உலகத்தில் உள்ள சரம், (movable) அசரம் (Immovable) ஆகிய எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆக்கப் பெற்றவை; இந்த அணுவினுள்ளே நடைபெறுகின்ற ஒட்டம் அல்லது நடனம் நின்று விட்டால் அழிவைத் தவிர வேறு வழியே இல்லை என்ற உண்மையையும் விஞ்ஞானம் கண்டது.

எல்லாப் பொருட்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இந்த அணுவினுள் நடைபெறும் இந்த நடனத்தை, மிகப் பெருக்கிக் காட்டும் எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப்பின் மூலம்கூட நாம் காணமுடியாது. எனவே, நம்முடைய முன்னோர்கள் இந்த மாபெரும் தத்துவத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளுமாறு ஒரு வழியைக் கண்டனர்.

நாமரூபமற்றதும், எங்கும் நிறைந்திருப்பதும், எல்லாப் பொருட்களிலும் ஊடுருவியும், வெளிப் பட்டும், தனித்தும் நிற்கக் கூடிய பரம்பொருளுக்கு ஒரு வடிவம் கற்பித்தனர். மனிதன் எவ்வளவுதான் அறிவின் துணைகொண்டு மேலே சென்றாலும் தன்னை ஒத்த ஒரு வடிவத்தைத்தான் கற்பிக்க முடியும்.

இக்கருத்தையே 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் மெய்ஞானியாகிய விவேகானந்தர், “மீன்களெல்லாம் கூடி தமக்குள் ஒரு கடவுளைப் படைத்தால் அதற்கு ஒர் மீன் வடிவம்தான் கொடுக்க முடியும்"என்று கூறிப் போந்தார். எனவே மனிதன் நாம, ரூபம் அற்ற பரம்பொருளுக்கு ஒரு வடிவம் கொடுக்க விரும்பினான். அவன் மெஞ்ஞானத் தால் கண்ட உண்மை, கூறுகளின் உள்ளே நடை பெறுகின்ற நடனம், இந்த இரண்டையும் ஒன்றாக்கி நடராஜ வடிவத்தைக் கற்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/41&oldid=1291388" இலிருந்து மீள்விக்கப்பட்டது