பக்கம்:அருளாளர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபவிக்கிறான் என்று கூறுதல் தவறு. அத்தொல்லைகளை அவனும் ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த உலக நியதிக்குத் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறான். இதனையே ஆழ்வார்,

‘துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்'

(நாலா:2408)

என்று பாடிச் செல்கின்றார்.

வைணவ சமய ஆழ்வார்கள், சைவ சமய நாயன்மார்கள் ஆகிய அனைவருடைய வாழ்வையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் நம்மாழ்வார், ஞானசம்பந்தர் இருவரும் தனியே ஒரு தொகுப்பில் அடங்கக் காணலாம். ஏனையோர் அனைவரும் ஒரு தொகுப்பில் அடங்கக் காணலாம். ஆழ்வார்கள், நாயன்மார்களிடையே வேறுபாட்டைக் கற்பித்து உயர்வு தாழ்வு கூறுவதாக யாரும் கருதிவிட வேண்டா. இந்த இரண்டு பெருமக்களும் ஆண்டாள் இளையவர்கள். இருவரும் ஓதாதுணர்ந்தவர்கள். ஏனையோர்போல முயன்று இறைவன் திருவருளைப் பெறாமல் அத்திருவருள் தானே வந்து அமையப் பெற்றவர்கள். மிக இளைமையிலேயே மெய்ப்பொருள் அறிவு பெற்று, மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர்கள். காலத்தாலும் ஏழாம் நூற்றாண்டில் முன் பின்னாக வாழ்ந்தவர்கள். இவர்களுடைய பாடல்களைப் படிப்போர் ஒரு முக்கியமான செய்தியை அறியாமல் இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/92&oldid=1291527" இலிருந்து மீள்விக்கப்பட்டது