194 * அருளாளர்கள்
திருநாவுக்கரசரும் இறைவனை பஜனைப் பாட வேண்டுமென்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக திருவிழிமிழலையில் இரண்டு இடங்களில் மடங்களை அமைத்து இரண்டு இடங்களிலும் சமையல் செய்யுமாறு செய்து, நாதன் விரும்பும் அடியார்கள் அனைவரும் வந்து விருந்துண்டு செல்க எனப் பறையறைவித்து சோறுப் போட்டார்கள் என்பதை நாம் அறிகின்றோம். எங்கே வறுமை? மக்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தொடரவிடாமல் தடை செய்கின்றதோ அங்கே இந்த அடியார்கள் குறுக்கிட்டார்கள். உடனே அந்தப் பசியைப் போக்குவதற்கு முயன்றார்கள்.
பிற்காலத்தில் வந்த விவேகானந்தர், “பசியுடைய வனுக்கு ஆண்டவன் கூட ரொட்டித் துண்டின் வடிவமாகத் தான் வருகிறான் என்று சொல்கிறார்". இதை நம்முடைய பெரியவர்கள் மறக்கவேயில்லை. ஆனால் இப்படித் தேவை ஏற்படுகின்ற போது இத்தகைய காரியத்தைச் செய்தார்களே தவிர வறுமையைப் போக்குவதை ஒருதலைப்பட்ட கடமையாக மேற்கொள்ளவில்லை. காரணம் 7ஆம் நூற்றாண்டில் இந்த அளவுக்கு வறுமையும், துன்பமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான். உயிர்கள் அனைத்தும் இறைவனது வடிவம் என்பதை அறியாதவர்களா இந்தப் பெருமக்கள்? நன்றாக அறிந்தவர்கள். 'அட்டமூர்த்தம்' ன்று சொல்லுவதைப் பார்ப்போமேயானால் உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் பொருள்களும் இறைவனுடைய வடிவம். 'இறைவன் ஒவ்வொரு உயிரிலுள்ளும் உறைகிறான்' என்பதை நன்கு அறிந்தவர்கள்.
ஆகவே எந்த மனிதனாகட்டும், விலங்காகட்டும் எந்த உயிராக இருந்தாலும் அது இறைவன் உறைகின்ற இடம் என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள் என்றாலும்,