214 ஆத்மாவின் ராகங்கள்
'ஆசிரமம் எப்படி நடக்கிறது?’ என்று கேட்க நினைத்து 'ஆசிரமம்...' என்று மதுரம் தொடங்கிய போதே இருமலும் சேர்ந்து வந்து அவளைப் பேசவிடாமல் செய்தது. அவளைப் பேசாமலிருக்கும்படி சொல்லிவிட்டு அவரே ஆசிரமத்தைப் பற்றி அவளுக்குத் திருப்தி ஏற்படும்படி எல்லாம் சொன்னார். கேட்டு முகமலர்ந்தாள் அவள்.
'கொண்டு வந்து சேர்த்தாச்சு, கொஞ்சநாள் இங்கேயே உன்னோட இருக்கச் சொல்லி உத்தரவே போட்டிருக்கேன் இவனுக்கு. நீதான் பிழைச்சு எழுந்திருக்கணும் அம்மா! சீக்கிரமே நம்ம ஆசிரமத்துக்கு வந்து, ரகுபதி ராகவ, வைஷ்ணவ ஜனதோ எல்லாம் பாடணும் நீ. தேசத்துக்குச் சுதந்திரமும் கிடைச்சிடும் போலேருக்கு. முதல் சுதந்திர கீதமாக உன்குரலாலே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அந்தப் பாரதியார் பாட்டை நீ பாடி நாங்க கேட்கணும். சுதந்திரம் வந்ததுமே ராஜாராமனோட விரதமும் முடிஞ்சிடறது. உங்க கலியானத்தையும் நானே ஆசிரமத்தில் வச்சு நடத்தி சந்தோஷப்படனும்' என்று ராஜாராமனைக் காண்பித்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினார் பிருகதீஸ்வரன். பதிலுக்கு அவள் முகத்தில் வழக்கமாக மலரும் தானம் கலந்த புன்னகை ஒருகணம் மெல்லிய ஒளிக்கீற்றாக மலர்ந்து மறைந்தது. பற்களே வெளியில் தெரியாமல் இரகசியமாய் சிரிக்கும் பெண்களைக் குடும்ப ஸ்திரிகளிலேயே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டு மென்றிருக்கையில், அவள் சிரிக்கும் போதெல்லாம் அதில் ஒர் இங்கிதமான அந்தரங்கம் இருப்பதாக ராஜாராமன் என்றும் வியந்தது போலவே இன்றும் வியந்தான். கலீரென்று அவள் சிரித்து அவன் பார்த்ததில்லை. எப்போதோ தனியே அவன் முன் ஒரிருமுறை அவள் அப்படி சிரித்திருந்த போதுகூட அந்தப் பற்களின் வனப்பையும் ஒளியையும் கவர்ச்சியையும் முழுமையாகக் காண முடியாத வேகத்தில் சிரித்த சுவட்டோடு அந்தச் சிரிப்பையே விரைந்து ஒர் இரகசியமாக்கி விடும் நளினத்தை அவள் சுபாவமாகவே