பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சாப்பிட்டவனுக்கே அதன் இன்பம் உண்டென்றால் ஒரு முறை இறைவனது நாமத்தை மனம் கலந்து தினமும் சொல்கிறவனுக்கு அதனால் பயன் உண்டாகாமலா போகும்? பெரியவர்கள், "நான் ஆனந்தம் அடைந்தேன்" என்று எடுத்துச் சொல்லும்போது, அவர்களுடைய உள்ளத்தில் ஆனந்தத்தின் ஒரு துளி அரும்பியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினால் பேச வராது. பரமானந்தம் அரும்பும் நிலை ஆரம்ப நிலை. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் நிலை வேறு.

இறைவனது நாமத்தை மெல்ல மெல்ல உள்ள உள்ளப் படிப்படியாக இன்பம் உண்டாகும். இந்த உலக இயலில் உழைக்கின்ற உழைப்பின் அளவுக்குப் பயன் கிடைக்கிறது என்றால், அருள் நெறியில் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை என்று சொல்பவர் யார்? தியானம் உண்மையாக இருந்தால் உண்மையாக இன்பம் அரும்புவதைக் காணலாம்.

தொழிலாளி உழைக்கின்ற உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் கேட்கிறான். அதனை முதலாளி கொடுக்க மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது. முதலாளியோ தான் கொடுக்கிற ஊதியத்திற்கு அதிகமாகவே தொழிலாளிகளிடமிருந்து வேலை வாங்க நினைக்கிறான். அதனைத் தொழிலாளி செய்ய மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது.

ஆண்டவன் பெருங்கருணையாளன். அவன் நாம் எவ்வளவுக்கு உழைக்கிறோமோ அதனைவிடப் பன்மடங்கு அருளைத் தருவான். மெல்ல மெல்ல ஆண்டவனைத் தியானிப்பதன் மூலம் தம் உள்ளத்தில் அரும்பிய ஆனந்தத்தைச் சுவைத்துக் காந்தியடிகள் பேசினார். இன்னும் பலர் தாம் பெற்ற ஆனந்தத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவை யாவும் பொய்யா?

உலகியலில் ஈடுபட்டிருந்த நமக்கு, உடம்புக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தைச் சுவைத்து, பொறிகள் எல்லாம் அடங்கிச் சமாதி நிலையை அடைவது முடியாமல் இருக்கலாம். ஆனால் சின்னச் சின்னத் துளியாக அரும்புகின்ற ஆனந்தத்தை அநுபவிக்கலாம். அது அரிது அல்ல. வள்ளிமணாளனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல தியானித்தால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஆனந்தம் அரும்பும்.

206