பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கஞ்சியிலும் இன்பம்

புகுந்து விடுகிறது. பூசாரி ஆவேசம் கொண்டு துள்ளிக் குதிக்கிறான். மற்றொருவன் உடுக்கடிக்கிறான். இனிமேல் பூசாரி பேசுவதெல்லாம் சாமியின் வார்த்தை. சாமி இதோ குறி சொல்கிறது. தைரியம் சொல்கிறது. நம்பிக்கை ஊட்டுகிறது. என்ன கலகம் வந்தாலும் காப்பாற்றுவதாக வாக்களிக்கிறது. கல்யாணம் செய்து வைப்பதோடு நில்லாமல், மேலும் தம்பதிகளுக்குப் பிள்ளைவரம் கூடக் கொடுக்கிறது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

சத்ரு பயம்கொஞ்சம் உண்டு ஆனால்
       சாதித்துச் சங்கடம் போக்கிவைப் பேன்நான்.
எத்தனை பேர்கள்வந் தாலும் - இந்த
       எனக்குச் சமானமாய்க் கறுப்புகள் உண்டோ?
கல்யாணம் செய்துவைப் பேன் நான் - எந்தக்
       கலகம் வந்தாலும் கலங்கவே வேண்டாம்.
கறுப்பனென் றென்னையெண் ணிக்கொள் - அந்தக்
       காட்டேறி வீரன்சா முண்டிமா காளி
என்னாலே என்னஆ காது-எவன்
       என்ன விரோதத்தைச் செய்தாலும் அப்பா
புன்னை பிறவாதென் றாலும் - நல்ல
       புத்திரன் புத்திரி தான்தரு வேனே!

அஞ்சாதே அஞ்சாதே அம்மா!

பூசை போட்டுச் சாமி வசங்கொடுத்துவிடவே பூசாரிக்கு வேட்டியும் பணமும் கொடுத்து அவனை வணங்கி வழிபடுகிறார்கள். அவன் இருந்துதானே கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும்? பூசாரி வரம் கொடுத்து விடுகிறான். முகூர்த்தம் நிறைவேறிச் சாமி சொன்ன காரியங்க ளெல்லாம் நடைபெற்றுவிடும் என்ற நம்பிக்கை அந்தப்பாமர மக்களுக்கு இனி எந்தக் காலத்திலும் தளராது.