உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


புதைஇருளின் எழுகின்ற புகர்முகயா
        னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும்கடவுள் நுதல்கிழித்த
        விழியேபோல் உதயம் செய்தான்.”35[1]

என்று காட்டுவான். “யானைத் தோலாகிய போர்வையைத் தரித்துள்ள உதய பர்வதமாகிய உருத்திர மூர்த்தியினது நெற்றியினின்று திறந்து தோன்றின. “நெருப்புக்கண்போல் உதயம் செய்தான்" என்கின்றான், கவிஞன்.

கதிர்கள் விரிவதைத் திருநடனம் புரியும் அம்பலவன் சடை விரிந்தாடுவதனோடு ஒப்பிடுகின்றான் :

“எண்ணரிய மறையினொடு கின்னரர்கள்
        இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
        கரம்குவிப்ப வேலை என்னும்
மண்ணுமணி முழவுஅதிர வானரங்கில்
        நடம்புரிவான் இரவி யான
கண்ணுதல்வா னவன்கனகச் சடைவிரித்தால்
        எனவிரிந்து கதிர்கள் எல்லாம்.”36[2]

“அளவிடுதற்கு அரிய அருமறைகளை ஓதி முழக்கம் செய்கின்றனர், அந்தணர்கள், கின்னரர்கள் இசை பாடுகின்றனர்; தேவர்களும் முனிவர்களும் கைகூப்பி வணங்குகின்றனர். உலகோர் புகழ்கின்றனர்; கடல் என்னும் அழகிய மத்தளம் ஒலிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஆகாயமாகிய நடன அரங்கில் நடனம் செய்கின்றான், ஒளியையுடைய கதிரவன். தில்லையில் திருநடனம் புரியும் திருக்கூத்தனது பொன்னிறமான சடை விரிந்து செங்குத்தாய் நிற்றல்போல் “பகலவனின் செந்நிறமான கதிர்கள் விரிந்து பரவின” என்கின்றான், கவிஞன். சிவபெருமான் திருநடனம் புரியும் இடம், திருச்சிற்றம்பலம். சூரியன் நடம் புரியும் இடம், அம்பரம் (ஆகாயம்). சூரியன் நடம், புரிவதாய்க் கூறியது, அவனது கிரணங்கள் பளபளக்கும் காலத்து அசைவதாய்த் தோன்றுதல் பற்றியதாகும். சூரியன் உலகத்தார் யாவராலும் புகழப்படுவதனைப் ‘பலர் புகழ் ஞாயிறு’ என்ற திருமுருகாற்றுப்படை அடியினாலும் அறியலாம்.


  1. 35. பால. மிதிலைக் - 150.
  2. 36. பால. மிதிலைக் - 153.