பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

துணை ஆனாள். மார்பகச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். இமைகளில் வண்ணாத்திப் பூச்சிகள் குந்திக்கொண்டன, சிறக்கடிக்காமல் தப்புமா?

ஆசாரியைக் கண்டதும், கல்யாணி அம்மாளுக்கு அதிர்ச்சி விளைந்தது. சமாளித்துக்கொண்டாள். “வாங்க ஐயா! நகை நட்டெல்லாம் சாடாவையும் செஞ்சு முடிச்சுப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ஓ, ஒங்க மனசுப் பிரகாரம் சகலத்தையும் கச்சிதமாச் செஞ்சுப்பிட்டேனுங்க!...நீங்க குடுத்த பழைய நகை அம்புட்டையும் உருக்கி, ஒங்க பொண்ணு மாதிரி காட்டினது போலவே அற்புதமாச் செஞ்சிருக்கேனுங்க!... நீங்க என்னை நம்பினீங்க. அதாலேதான் எங்க விட்டோடவே பட்டறையை வச்சிக்கிட்டு அலுவல் பார்க்க ஒத்து வந்திச்சுது. இந்த நம்பிக்கை தானுங்க அம்மா எங்க மாதிரிப்பட்டவுங்களுக்குச் சொத்து சுகம் எல்லாம்!... எங்க அப்பாரு படிச்சுக் குடுத்திருக்கிற நல்ல பாடமும் இதுதானுங்க!...”

மூச்சுப் பிடிக்கப் பேசினவன், மறந்துபோகாமல் மூச்சைப் பிரித்துவிட்டான்! செய்துவந்த ஆபரணங்களை ‘வெல்வெட்’ துணிப்பெட்டியினின்றும் பிரித்தான் ஆசாரி சிங்காரம். ஜடைபில்லை, மோதிரம், கைவளை, சங்கிலி, மூக்குத்தி, லோலாக்கு என்று அணிகலன்கள் அணி வகுத்துக்கொண்டன.

கல்யாணி அம்மாளின் பெற்றமனத்தளத்தில் நின்ற பாசம் என்ற கம்பத்தில் மகிழ்ச்சி கொடிகட்டிப் பறந்தது. ஆனால் அவள் இதயம், அந்த இதயத்தின் இதயம் ஏன் அப்படி அல்லாடித் தள்ளாடுகிறது?

“ஏம்மா கோமதி, உன் மனச்சுக்குப் பிடிச்சிருக்குதாம்மா?”