பக்கம்:அமுதவல்லி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அங்காளம்மை

 பத்து ஆண்டுகள் கழிந்து போயின. நிகழ் காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் பாலம் அமைத்த அந்தப் பெரும் பொழுது எப்படித் தான் ஓடி நழுவியதோ? தண் எழில்-மாற்றுக் குறைந்த கொஞ்சும் அழகு மறுமுறையும் கறைபடலாகாதே என்ற நினைவில் பசியும் பட்டினியுமாகக் கிடந்து அவ்வழகைச் சிதைத்துக் கொண்ட அந்த விந்தைச் சம்பவம் அவளை மறக்க முடியாது. 'பத்து மாசம் சுமந்த பாலகன் உங்கிட்டே இருந்தா, இந்நேரம் உன்னோட சபதமும் பலிச்சிருக்கும்; உனக்கும் ஆறுதல் சொல்லியிருப்பான் ! தாயாக இருக்க வேண்டிய நீ பேயாகிப் போனியே?... 'என்று அவளுடைய மனச்சான்று ஏசித்திட்டி, ஆறாத புண்கள் ஆயிரமாயிரத்தை நெஞ்சத்திலும் பெற்ற மணி வயிற்றிலும் நிரப்பி விட்ட துயர அனுபவங்களை அவளால் மறத்தல் சாத்தியமன்று.
 காட்டுப் புதிரிடுக்கிலே புழுதி மண் மீது ரத்தக் கறையும் தானுமாகக் கிடந்த அக் குழவியை இமைப் போதுதான் அவள் கண்டிருக்க முடியும், உருப் புரியாத தோற்றமும், உருப் புரிந்த ரத்த வெள்ளமும் அவளை ஒவ்வொரு கனமும் சாகடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சித்திரவதையிலும் அவளுக்கு ஓர் ஆனந்தம் ஏற்படத் தான் செய்தது. 'ஆமா, நான் இப்பிடிச் சாகாமல் செத்துக்கிட்டிருப்பதுதான் நல்லது. நான் செஞ்ச மன்னிக்க ஏலாத குத்தத்துக்கு இதுதான் தகுந்த தண்டனை!...”

பொழுது ஏறிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/112&oldid=1376561" இலிருந்து மீள்விக்கப்பட்டது