பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லாவிட்டால் எந்த சமூக விரோதி வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கலகம் பண்ணுகிற மாதிரித்தான் ஆகியிருந்தது.

எல்லாப் பகுதிகளிலும், எல்லாப் பேட்டைகளிலும். மிரட்டி ஏய்த்துப் பிழைக்கிற ரெளடிக் கூட்டம் ஒன்று. இருந்தது. சில சமயங்களில் அப்படிக் கூட்டம் ஏதாவதோர் அரசியல் கட்சியின் சார்பையும் தோதாகத் தேடி வைத்துக் கொண்டிருந்தது. வசூல்களே சில கட்சிகளின் அன்றாடக் கொள்கையாக இருந்தன. பிளாட்பாரத்தில் கடை வைக்கிற பங்காரம்மாள் முதல் பளபளப்பான ஷோரூமுடைய கடை வரை எல்லாரையும் மிரட்டிப் பணம் பண்ண அவர்கள் கற்றிருந்தார்கள்.

முத்தக்காள் பூமியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்தத் தம்பி தன்னோடு இருந்து, மெஸ்ஸை நிர்வாகம் செய்ய ஒப்புக் கொள்ளுமா கொள்ளாதா என்பது அவளுக்குப் புரியவில்லை. அநுமானிக்க முடியாமலும் இருந்தது அது.

ஒரு நாள் மாலை இதைப் பற்றி பேசுவதற்காக முத்தக்காள் பூமியை அழைத்துக் கொண்டு தன்னுடைய பின் பக்கத்து அறைக்குப் போனாள்.

அந்த நேரத்தில் சித்ரா கல்லாப் பெட்டிக்கு அருகே அமர்ந்து பில்களுக்கு பணம் வாங்கிப் போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது சில்க் சட்டை முகத்தையே மறைக்கிற அளவு பெரிதாகக் கருப்புக் கண்ணாடி, வாயில் பைப், சகிதம் மினுமினுப்பான மேனியோடு ஓர் இரட்டை நாடி சரீர ஆள் பூமியைத் தேடி வந்தார்.

“இங்கே பூமிங்கறது யாரும்மா?”

“உள்ளே வேலையா இருக்காரு... உட்காருங்க... இதோ. வந்துடுவாரு."