பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

சாயங்கால மேகங்கள்

"உன்னை இந்தப் பாவத்தில் ஈடுபடுத்தி இதைச் செய்யத் தூண்டியவன் யாரென்று சொல்ல முடியுமா? உனக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“சொன்னாலோ யாரென்று காண்பித்துக் கொடுத்தாலோ நான் உயிரோடு நடமாட முடியாது சார்!”

“மிரட்டலுக்குப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இருக்கும் போது உன்னை யாரும் எதுவும் செய்து விடமுடியாது.”

“இந்தக் கும்பலைப் பத்தி உங்களுக்குத் தெரியாததுனாலே அப்பிடிச் சொல்றீங்க சார்! இவங்க தங்களைக் காட்டிக் கொடுக்கிறவங்களைச் சும்மா விட மாட்டாங்க.”

“சரி தொலையட்டும்... உனக்கு நல்ல வேலை கிடைத்தால் இதை எல்லாம் விட்டு விட்டு ஒழுங்காகப் படிக்க முடியுமா? அல்லது வேலை கிடைத்த பிறகும் பழக்க தோஷத்தால் திருட்டை விட மனசு வராதா?”

“என்ன வேலை சார்? எனக்கு யார் கொடுப்பாங்க? முதல்லே என்னை நம்பணுமே?”

“நான் நம்பிக் கொடுக்கிறேன். ஆனால் நீ என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறாயோ இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் நான் உன்னைத் தொடர்ந்து நம்புவதோ நம்ப்பாததோ இருக்கிறது.”

சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் அந்தப் பையனை அவ்வளவு விரைந்து பூமி நம்பியது பிடிக்கவில்லை; பிடிபட்ட பையனை உடனே போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று சித்ராவும், முத்தக்காளும் அபிப்ராயப் பட்டார்கள். பூமி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“சூழ்நிலையாலும், வறுமையாலும் தவறு செய்யத் தொடங்கி விட்ட ஒருவனைத் தொடர்ந்து தவறு செய்பவனாகவே மாற்றி விட்டுவிடுவதற்கு நாமும் உதவி செய்துவிடக்