பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

165

அதற்குப் பின் உட்புறக் கூடத்தில் பூமி முத்தக்காளிம் இந்த நிகழ்ச்சியைக் கூறி அவள் தன்னிடம் அப்படி நடந்து கொண்டது முறையில்லை... என்று கண்டித்து இரைவதைச் சித்ராவே கேஷ் டேபிளில் அமர்ந்தபடி கேட்க முடிந்தது. அவன் தன் சார்பில் முத்தக்காளை கண்டித்துப் பேசியது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.

வாடிக்கையாளர்களுக்குப் பில்லைக் குறைத்துப் போட்டு அதற்குப் பதிலாக ‘டிப்ஸ்’ வாங்கிப் பணம் பண்ணிக் கொண்டிருந்த அந்த சர்வரின் ஊழலைத் தான் கண்டுபிடித்து அம்பலமாக்கியதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்கான முயற்சி தான் இது என்பது சித்ராவுக்கு நன்றாகப் புரிந்திருந்தாலும் கொஞ்சம்கூட யோசிக்காமல் முத்தக்காள் அதற்குப் பலியானது வருத்தத்தை அளித்தது. அவளால் அதை சிறிதும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வழக்கமாக ஏழு ஏழரை மணிக்குக் கூட்டம் குறையத் தொடங்கியதும் கேஷ் டேபிளை பூமியிடமோ முத்தக்காளிடமோ ஒப்படைத்துவிட்டு அவள் வீடு திரும்புவாள்.

அன்று உள்ளே பூமிக்கும் முத்தக்காளுக்கும் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்ததால் எட்டு-எட்டே, கால் மணி வரை அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேஜையில் கம்பியில் வாங்கிக் குத்தியிருந்த பில் துணுக்குகளை எண்ணி அவற்றில் இருந்த தொகையை பொறுமையாக ஒரு தாளில் கூட்டிக் கணக்குப் பார்த்து அதே தொகை ரொக்கமாக கேஷ் டேபிளில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டாள் சித்ரா. அதைத் தாளிலும் எழுதி வைத்தாள். முதல் முறையாக இன்று அதெல்லாம் செய்தாள்.

எட்டரை மணிக்கு பூமி முத்தக்காளை அழைத்துக் கொண்டு கேஷ் டேபிளருகே வந்தான். மெஸ்ஸில் அப்போது வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்திருந்தது.

“என்னை மன்னிச்சிடும்மா! நான். ஆத்திரத்திலே யோசிக்காமல் பேசினது தப்புதான்! அந்தப் பாவி எங்கிட்ட வந்து