பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33

காந்தியடிகள் காலத்து அரசியலில் மக்களுக்காகத் தலைவர்கள் தியாகம் செய்தார்கள். இன்றைய அரசியலிலோ தலைவர்களுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.


ங்கு நிலவிய சூழ்நிலை மர்மமாகவும் புதிராகவும் இருந்தது. பூமியைப் பார்த்த கண்கள் அனைத்துமே சந்தேகத்தோடுதான் பார்த்தன. அங்கிருந்தவர்கள் பயப்படுகிறார்களா பயப்படுத்தப்படுகிறார்களா என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. ஒரு சமயம் பார்த்தால் யாருக்கோ, எதற்கோ பயப்படுவது போலவும் இருந்தது. இன்னொரு சமயம் பார்த்தால் யாரையோ, எதையோ பயமுறுத்துவது போலவும் இருந்த்து.

ஒரு பியூட்டி பார்லருக்குரிய அழகு உணர்ச்சியோ, அலங்கார உணர்ச்சியோ, இங்கித நளின இதங்களோ, மென்மைகளோ அங்கு யாரிடமும் தென்படவில்லை. பூமி மிக விழிப்பாகவும், சகல விதங்களிலும் சுதாரித்துக் கொண்ட மன நிலையுடனும் எச்சரிக்கையாகவே இருந்தான்.

வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்மணியினுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு அவன் இருக்கையில் உட்கார்ந்ததுமே குண்டர்கள் இருவரும் அவனருகே பக்கத்துக்கு ஒருவராக வந்து நின்று கொண்டனர். பூமி பொறுமை இழக்கிற அளவுக்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று.