சாயங்கால மேகங்கள்
159
பழகிய- பழகும் வேறு பல இளைஞர்கள் எல்லாரையும் நினைத்து விட்டுப் பூமியையும் நினைத்தபோது ஓர் அடிப்படை வித்தியாசத்தை அவளால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுகிறவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு.
அவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பாராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது. பூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும்போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்து இரண்டையும் பற்றிய கர்வமோ தலைக்கனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒருபோதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது.
அவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டதுபோல் நெஞ்சை நிமிர்த்திக்