சாயங்கால மேகங்கள்
21
மறைந்தவர்களை மறப்பதும் மறந்தவர்களை மறைப்பதும் பெரிய நகரங்களின் கலாச்சார குணாதிசயங்களில் ஒன்று.
பூமி இரண்டு மூன்று நாட்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். பயம், சோர்வு இவற்றை என்னவென்றே அறியாத அவன், முதல் முதலாகப் பயத்தின் ஆரம்பங்களான வெறுமையையும் தனிமையையும் தன்னைச் சுற்றி உணரத் தலைப்பட்டான்.
எங்கும் ஓடியாடிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவனுக்குப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும், படித்துக் கொண்டே வீட்டில் புதைந்து கிடப்பது அலுப்பூட்டுவதாயிருந்தது. தேங்குகிற தண்ணீர் மெல்ல மெல்ல நாற்றமெடுத்துக் கொசு மொய்ப்பதற்கு இலக்காகி விடுவதைப் போல இயக்கமற்றுப் போகிற மனிதனும் ஆகிவிடுகிறான். உடலால் இயக்கமற்று முடங்குவதைவிட மோசமானது மனத்தால் இயக்கமற்று முடங்குவது.
தன் தாயின் மரணம் பூமியின் உடல் இயக்கத்தை மட்டும் பாதிக்கவில்லை, மன இயக்கத்தையும் பாதித்திருந்தது. தாயைப் பிரிந்து வாழவே முடியாத அளவு செல்லப் பிள்ளையாக அவன் வளர்ந்துவிடவில்லை. ஆனாலும் தாயின் பிரிவு அவனைப் பாதிக்கவே செய்திருந்தது. பாரதியாரின் கவிதைகள் அவனுக்குத் தெம்பும், நம்பிக்கையும் ஊட்டின். தமிழ்ப் பத்திரிகைகளின் நைந்து போன ஃபார்முலா எழுத்துக்கள் அவனுக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஊட்டின. வைக்கோலை தின்பது போல் சக்கை சக்கையாயிருந்தது. வாழ்க்கையின் ஆழத்தையும், அகலத்தையும் அவை சார்ந்திருக்கவில்லை. வீடுதோறும் விளங்கி அலங்கரிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் படு பிரபலமான குடும்பப் பத்திரிகை ஒன்று ‘வெல்வெட் விநோதாவுக்கு தோளில் மச்சமிருக்கிறதா இடுப்பில் மச்சமிருக்கிறதா?’ என்பதைக் கண்டுபிடிக்கும்படி தன் வாசகர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவில் ஒரு போட்டி வைத்-