6
சாயங்கால மேகங்கள்
கொடுக்காமல் தன்னிடமே நேரில் தேடிக் கொண்டு வந்து கொடுத்தானே என்று முக மலர்ச்சியோடு கனிவாக இரண்டு வார்த்தை நின்று பேசினால், எல்லை மீறிப் போகிறதே என்று அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டதோ என்னவோ? அதன் விளைவு அடுத்த கணமே தெரிந்தது.
விருட்டென்று பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் அந்தப் பெண். பேச்சும் புன்னகையும் முறிந்து ரூபாயில் கணக்குத் தீர்க்கிற எல்லை. வந்ததும் அவன் சுதாரித்துக் கொண்டான். அழகிய மௌனங்கள் உடைந்து இறுக்கமான புழுக்கம் சூழ்ந்தது.
“மன்னிக்க வேண்டும், பணத்துக்காக நான் இந்த உதவியைச் செய்யவில்லை. தயவு செய்து நான் யோக்கியனாயிருப்பதற்கு உதவி செய்யுங்கள், போதும். விலை நிர்ணயித்து விடாதீர்கள். நானும் உங்களைப் போல் படித்துப் பட்டம் பெற்றவன் தான். வேறு வேலை கிடைக்காததால் ‘ஸெல்ஃப் எம்ப்ளாய்மெண்ட்’ திட்டத்தின் கீழ் பாங்க் லோன் மூலம் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.”
இதைச் சொல்லியபடியே ஸீட்டைத் தூக்கி அதற்கு அடியிலிருந்து. மகாகவி பாரதியார் கவிதைகள், ராஜாராவின் ஆங்கில நாவல், ஸெர்ப்பெண்ட் அண்ட் தி ரோப், நிரத் சௌத்ரியின் ஆடோபயாகிராஃபி ஆஃப் ஆன் அன்னோன், இண்டியன்’... என்று சில புத்தகங்களை அடுக்கி எடுத்துக் காட்டினான் அவன். அவள் முகத்தில் வியப்பு மலர்ந்தது.
ஆட்டோவில் ஞாபகப் பிசகாகத் தான் மறந்து வைத்து விட்டு வந்த பணமும் தங்க வளைகளும் இருந்த பையை நாணயமாகத் திரும்பக் கொணர்ந்து சேர்த்த ஒரு டிரைவர் என்ற மதிப்பீட்டில் அதற்குப் பத்து ரூபாய் நன்றித் தொகை நிர்ணயித்த அவள் இப்போது தயங்கினாள்.
“உங்கள் பெயர்......?”
“பூமிநாதன்.”