உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சாயங்கால மேகங்கள்

யாரிடமும் அவன் சொல்லவில்லை. இரகசியமாகவே கிளம்பியிருந்தான், முதலில் மகாபலிபுரம் போகிற வழியில் முந்திரி மரங்களும் பனை மரங்களுமாக இருந்த ஒரு வனாந்திரப் பகுதியில் இயங்கிய ‘மன்னாரு’ வின் கள்ளச் சாராய சாம்ராஜ்யத்தில் போய்த் தேடினான். இவன் உளவாளியோ என்ற சந்தேகத்தில் யாரும் அங்கு பிடி கொடுத்துப் பேசவே இல்லை. இவனைப் பின் தொடர்ந்தார்கள். ஜாடை மாடையாக மிரட்டவும் செய்தார்கள், சிரமப்பட்டுத் தப்பி வர வேண்டியிருந்தது.

அடுத்து மந்தைவெளியின் ஒரு மாடியில் இருந்த சூதாட்ட கிளப்பில் போய்த் தேடிய போதும் இதே அநுபவம்தான். கட்சி அலுவலகத்தில் போய்த் தேடிய போது, “அவர் இங்கே பொழுதன்னைக்கும் வர்ரதில்லை. தலைவருங்க, மந்திரிங்க வர்ரப்ப மட்டும் தான் வருவார” என்று மிகவும் மரியாதையாகப் பதில் சொன்னார்கள்.

தொடர்ந்து மன்னாருவின் பலசரக்குக் கடை, கமிஷன் மண்டி, வீடு, எங்கு விசாரித்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஜனாதிபதியைக் கூட சந்தித்து விடலாம் போலிருந்தது. மன்னாருவைச் சந்திக்க முடியவில்லை. கடைசியில் பூமி தன்னுடைய தேடும் உத்தியை மாற்றினான்.

அடையாறு மெயின் ரோடில் “ப்யூட்டி பார்லர் - பாடி மசாஜ் செய்யப்படும்” என்ற பெயர்ப் பலகையுடன் மன்னாரு நடத்தி வந்த ஒரு விபசார விடுதியில் போய்த் தேடும் போது மன்னாருவுக்கு மிகவும் வேண்டியவன் போலவும் அவனுடைய அந்தரங்கமான ‘பிஸினஸ் பார்ட்னர்’ போலவும் தானே நடித்து விசாரித்தான், காரியம் பலித்தது.

‘ப்யூட்டி பார்லர்’ என்றும் ‘ஹெல்த் கிளினிக்’ என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் போர்டுகள் தொங்கிய அந்தப் பெரிய பங்களாவின் முகப்பில் நுழைந்தவுடனேயே