உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

சாயங்கால மேகங்கள்

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைக்காரர்கள், கடத்தல்காரர்கள், கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள் எல்லாருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த எதிர் அரசாங்கத்தில் தேர்தல், ஜனநாயகம், மக்கள் நம்பிக்கை இவையெல்லாம் இல்லாமலே பலர் தொடர்ந்து வெற்றிகரமாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அசல் அரசாங்கமே சில இடங்களில் இந்த எதிர் அரசாங்கத்தின் தயவில் காலந்தள்ளிக் கொண்டிருந்தது. எதிர்ச் சக்திகள் அத்தனை வலுவாக இருந்தன.

மிகமிக மத்த கதியிலான ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சில . குடிசைகள். தாழ்வான ஓட்டடுக்கு வீடுகள்’ தென்பட்ட ஒரு கரையில் அவர்களை இறக்கி விட்டார்கள் கட்டுமரக்காரர்கள். அவர்கள் கரையிலேயே தங்கிக் : கொண்டார்கள். ஊருக்குள் வரவோ பூமிக்கும் அவனது நண்பர்களுக்கும் வழிகாட்டவோ அவர்கள் தயாராயில்லை. வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தீவில் வழி காட்டுவதற்கு அதிக அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை.

மணலிலும் தாழம்புதர்கள் புன்னை மரங்களின் நடுவிலுமாகச் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. திசை தடுமாறி விடாமல் இருப்பதற்காகத் தங்கள் கைவசமிருக்கும் டார்ச்லைட்டைக் கால்மணி நேரத்துக்கு ஒருமுறை அடித்துக்காட்டுவதாகக் கட்டுமரக்காரர்கள் கூறியிருந்தார்கள். கடத்தல் நடை முறைகள் கட்டுமாக்காரர்களுக்குக் கூட இந்த டார்ச் லைட் ஏற்பாட்டைக் கற்றுக் கொடுத்திருந்தன.

பூமி நண்பர்களிடம் சொன்னான்: இங்கே ஈ காக்கை தென்படவில்லையே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்; நடக்கும் ஒவ்வோர் அடியையும் உஷாராக எடுத்து வையுங்கள். இது கடத்தல்காரர்களின் சொர்க்க பூமி, அதிக கவனமாயிருக்க வேண்டும்."