உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

சாயங்கால மேகங்கள்

மேரீஸ் கல்லூரியில் படிக்கிறாள். தன்னைக் காதலிக்கிறான் என அவள் நம்பிய ஓர் இளைஞனோடு கடற்கரைக்கு வந்திருக்கிறாள். முரடர்கள் வந்து கத்தியைக் காட்டியதும் அந்த இளைஞன் பயந்து போய் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டானாம்.

“காதற் பெண்கள் கடைக்கண் பணியில் காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் என்று பாடினார் பாரதியார். பயந்தாங் கொள்ளிகளைக் காதலிக்கக்கூடாது அம்மா” என்றான் பூமி.

“அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய மகாகவியும் கற்பின் கனலாக எழுந்து ‘தேரா மன்னா’ என்று பாண்டியனை நியாயம் கேட்ட கண்ணகியும் சிலைகளாக இதே கடற்கரையில்தானே நிற்கிறார்கள்?”

“வாழ்வில் யார் யாரைக் கடைப்பிடிப்பது சிரமமோ அவர்களை எல்லாம் நடுத்தெருவில் சிலைகளாக நிறுத்தி வைத்துவிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம் சித்ரா.”

பூமியும் சித்ராவும் அந்தப் பெண்ணுக்கு நிறைய அறிவுரைகள் கூறினார்கள்.

“அரும்பு மீசையும் சுருட்டைத் தலைமுடியும் உள்ள ஆண் பிள்ளைகள் எல்லாருமே ஆண் தன்மை உள்ளவர்கள் என்று நம்பிவிடாதே! ஆண் தன்மையே அற்ற பேடிகள் பலர் இன்று ஆண்களின் தோற்றத்தோடு நடமாடுகிறார்கள். கண்ட வேளையில் தனியாகக் கடற்கரைக்கு வராதே! கண்ணகி சிலையின் நிழலடியில் கூடக் கற்புக்கு ஆபத்து வரலாம். ஆயிரக்கணக்கான சினிமாக்களும், பத்திரிகைத் தொடர்கதைகளும், நாடகங்களும் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே விளம்பரப்படுத்தி வைத்திருக்கின்றன. எப்படி எப்படி எங்கெங்கே ‘ஈவ் டீஸிங்’ சாத்தியம் என்பதைச் சினிமாக்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த வயதில் வீணே கெட்டுப் போகாதே. படிப்பில் கவனம் செலுத்து.பெற்றோர் அறிவுரைகளைக் கேள்.